2015-05-25 17:07:00

வாரம் ஓர் அலசல் – போதை தெளிய வேண்டும்!


மே,25,2015. கடந்த வாரத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. மாநிலத்தில், முதல் இடத்தை, 41; இரண்டாம் இடத்தை, 192; மூன்றாம் இடத்தை, 540 மாணவ, மாணவியர் பிடித்து, அரிய சாதனையை நிகழ்த்தி உள்ளனர். ஏறக்குறைய இரண்டு இலட்சம் மாணவர்கள், ஏதாவது ஒரு பாடத்தில், நூற்றுக்கு நூறு எடுத்து உள்ளனர். நம்மவர் மத்தியில் படிப்பறிவு ஒரு பக்கம் வளர்ந்தாலும், காலில் விழும் கலாச்சாரமும் பெருகி வருகிறது. சென்ற மே மாதம் முதல் இந்தியாவில் காலில் விழுந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகின்றது. அரசியலில் காலில் விழுவது ஒருபுறமிருக்க, சேலத்தில் சமூக ஆர்வலர் ஒருவர், ஒரு நற்செயலுக்காக 1330 நாள்கள் பலர் கால்களில் விழுந்தார் என்று இஞ்ஞாயிறு விகடன் இதழில் வாசித்தோம். 83 வயது பாலகிருஷ்ணன் என்கிற பிராங்கிளின் ஆசாத் காந்தி அவர்கள், மதுவுக்கு எதிரான தனது போராட்டத்தின் ஒரு முயற்சியாக இப்படிச் செய்திருக்கிறார். ஆசாத் காந்தி அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து, கைகளைப் பிடித்துக்கொண்டு கதறியிருக்கிறார். எப்படி?

ஐயா நீங்க குடிக்காதீங்க. குடி உங்கள் உடலைக் கெடுக்கும், உங்கள் குடும்பத்தைக் கெடுக்கும், நீங்கள் இருக்கக் கூடிய சமூகத்தைக் கெடுக்கும், சகலத்தையும் கெடுக்கும் என்று கெஞ்சிக் கேட்டுள்ளார். சேலத்தைச் சேர்ந்த காந்திய மக்கள் இயக்கத்தின் மூத்தத் தலைவரான ஆசாத் காந்தி அவர்கள், குடிமன்னர்களின் காலில் விழுந்து இப்படிக் கெஞ்சியபோது, அவர் மீது எச்சில் துப்பியிருக்கிறார்கள், கல் வீசியிருக்கிறார்கள், கொலை செய்துவிடுவேன் என்றெல்லாம்கூட மிரட்டியிருக்கிறார்கள். ஆனாலும் பதிலுக்கு இவர் செய்தது அவர்களின் காலில் விழுந்தது மட்டுமே. இவர் ஒரு மருத்துவர். வாழும் காந்தியவாதியான அவருக்கு, அவரது போராட்டத்தின் 1330வது நாளான இம்மாதம் 16ம் தேதி நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் இவரைப் பற்றிப் பேசியவர்கள், பாலகிருஷ்ணன் ஐயா இந்தப் போராட்டத்தை மிகுந்த உறுதியோடு ஆரம்பித்தார். 25 நாட்களில் முடித்துக்கொள்ளுங்கள் என்று கேட்டோம். ‘முடியாது’ என்றார். 50-வது நாளிலும் முடியாது என்றார். 100-வது நாளிலாவது முடித்துக்கொள்ளுங்கள் என்றோம், மறுத்துவிட்டார். இப்போது திருக்குறளைக் குறிக்கும் வகையில் 1,330-வது நாளில் முடித்திருக்கிறார். அவரிடம் 28 ஆயிரம் கோடி ரூபாய் இருந்திருந்தால் அரசிடம் கொடுத்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியிருப்பார். பணம் இல்லாததால்தான் குடிப்பவர்களின் கால்களில் போய் விழுந்துகொண்டிருக்கிறார் என்று கூறியதாக செய்தியில் வாசித்தோம்.

அவ்விழாவில் பேசிய பாலகிருஷ்ணன் ஆசாத் காந்தி அவர்கள், கூட்டமெல்லாம் மதுக்கடைகள் முன்பு நிரம்பி வழிகின்றன. அந்தக் கூட்டத்தில் நம் அருமை மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். நாங்களும் காலைப் பிடித்து கெஞ்சுகிறோம். அவர்கள் குடும்பத்துக்காகக் கண்ணீர் வடிக்கிறோம். கொலை செய்கிறவங்களுக்குக்கூட தூக்குத் தண்டனை தர்றாங்க. பல்லாயிரக்கணக்கான மக்களை மதுவைக் கொடுத்து கொலை செய்கிற அரசுக்கு என்ன தண்டனை? சாகுறதுக்குள்ள சிறைக்குப் போகணும். மதுவுக்கு எதிராகப் போராடி சிறைக்குள்ளயே சாகணும். அதைப் பார்த்து நாலு பேராவது திருந்தினா, அதுவே போதும் என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். இவ்விழாவில் பேசிய மற்றொருவர், ஓர் அரசு, மின் உற்பத்திக்கு ஆகும் இலக்கை நிர்ணயிக்கலாம், கல்விக்கு ஆகும் இலக்கை நிர்ணயிக்கலாம். ஆனால், 29 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயிக்கலாமா?.  கடந்த ஆண்டு மது விற்பனையின் மூலம் அரசுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கிறது. 26 ஆயிரம் கோடி என்பது வரி வருவாய். அப்படியென்றால் மது விற்பனையின் அளவு அதைவிட அதிகம் என்று கூறியுள்ளார். இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிர் இழப்பவர்கள் தமிழகத்தில்தான் அதிகம். கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் காவல்துறையால் பதிவுசெய்யப்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை 66,238. அதில் கொல்லப்பட்டவர்கள் 15,563 பேர். அது தவிர விபத்துக்களால் சுய நினைவு, கை, கால்களை இழந்து முடங்கியவர்களின் எண்ணிக்கை 6,513. இப்படி அனைத்து வகைகளிலும் ஓர் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் சாலை விபத்துக்களால் கடுமையான பாதிப்புக்களைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தொடுகிறது. இதில் 70 விழுக்காட்டு விபத்துக்கள் மது போதையில் வாகனம் ஓட்டியவர்களால் ஏற்படுகின்றன. மது அருந்திவிட்டு இரண்டு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்களை ஓட்டுபவர்களை சென்னையில் காவல்துறை சோதனை செய்கிறது. ஆனாலும் காவல்துறையின் இருப்பிடம், சோதனை நேரம் போன்றவற்றைத் தெரிந்துகொண்டு குடிமகன்’ வாகன ஓட்டிகள் முன்கூட்டியே குடித்துவிட்டுப் புறப்பட்டு விடுகிறார்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்க அதிக இடங்களில் காவல்துறை சோதனை மேற்கொள்கிறார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேர் மீது வழக்குகள் போடப்படுகின்றன? 2013ம் ஆண்டு 'Drunken Driving’ வழக்கு பதியப்பட்டு ஓட்டுனர் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் மொத்தமே 84 பேர்தான். பேருந்து நிலையம், திரையரங்கு எனப் பரபரப்பான இடத்தில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையில் வார இறுதியில் ஒரு மணி நேரத்தில் குடித்துக் கலைபவர்கள் எண்ணிக்கையே ஐந்நூறைத் தாண்டும். ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஆண்டு முழுவதும் 1,352 பேரின் ஓட்டுனர் உரிமம் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருக்கிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களால் ஏற்படும் விபத்துக்களின் பாதிப்பு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்.

இவ்வாறு சொல்லும் காவல்துறை அதிகாரிகள், பொது மக்கள் ஆதரவு இல்லாமல் குடிபோதை விபத்துக்களைக் குறைக்க முடியாது. குடி விபத்துக்களைக் குறைக்க வேண்டுமெனில், ஒன்று, குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, இரண்டு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறவர்களுக்கு ஆதரவாக பரிந்துபேச யாரும் காவல்நிலையத்துக்கு  வரக்கூடாது என்கிறார்கள். குடிபோதையால் ஏற்படும் விபத்துக்களை, அரசும் காவல்துறையினரும் மட்டுமே தடுத்துவிட முடியாது. மனித வெடிகுண்டுகளாக உலவும் குடிமகன்கள் இந்த விபத்துக்களின் கடும் பாதிப்புக்களை உணர்ந்து திருந்தினால் மட்டுமே குடிபோதை விபத்துக்களைத் தடுக்க முடியும் என்றும் சொல்கிறார்கள். எனவே அன்பர்களே, குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள். ஓட்டுனர் குடிபோதையில் இருந்தால் அவருடைய வாகனத்தில் ஏறாதீர்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்ட நண்பர்களை அல்லது பெற்றோரை அனுமதிக்காதீர்கள்.

அளவுக்கு மீறிக் குடிப்பதால் உடலுக்கும் மட்டுமின்றி மனதுக்கும் கேடு விளையும்.  ஏறக்குறைய எல்லா மதுபானங்களிலும் இருக்கிற Ethanol என்ற வேதிப் பொருளின் அளவு, நரம்பு மண்டலத்தைச் சீர்குலைத்து விடுகிற அல்லது அழித்து விடுகிற அளவுக்கு சக்தி படைத்தது. உடலுக்குள் அதிகளவு Ethanol செல்லும்போது ‘கோமா’ நிலையும், கடைசியில் மரணமும் ஏற்படுகிறது. மதுபானத்தை அதிகமாகக் குடிக்கும்போது Ethanol நம் உடலிலேயே தேங்கி மூளையின் செயல்பாட்டைத் தாக்குகிறது. மூளையின் தகவல் பரிமாற்ற ‘நிலையங்களில்’ மாற்றங்கள் ஏற்பட்டு மூளை இயல்பாக இயங்க முடியாமல் போகிறது. அதனால்தான் ஒருவர் அதிகமாகக் குடிக்கும்போது, அவருடைய வாய் உளறுகிறது, கண் மங்குகிறது, கால் தடுமாறுகிறது, மதி கெடுகிறது; அளவுக்கு மீறி மதுபானம் குடிப்பதால், மூளையில் வேதிய மாற்றங்கள் ஏற்படுவதோடு செல்கள் சிதைந்து அழிந்து மூளையின் உருவே மாறிவிடுகிறது. உணவை ஜீரணிப்பதில், நோய்தொற்றை எதிர்ப்பதில், இரத்த ஓட்டத்தை சீராக்குவதில், உடலிலிருந்து மதுபானம் உட்பட மற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து மதுபானத்தைக் குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, அதில் நோயும், புற்று நோயும் ஏற்படுகின்றன. மேலும், மது இன்றி வாழ முடியாது என்று, குடிக்கு அடிமையாகும் நிலையும் ஏற்படும். இரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால், முதலில் மனதில் பயத்தை நீக்கும். இதனால் வாகனத்தை வேகமாக ஓட்டத் தூண்டும். மேலும் நிதானத்தை இழக்கச் செய்யும்.  வாகனங்களை முந்தப் போதுமான இடம் இருக்கிறதா, எதிரில் வரும் வாகனம் எவ்வளவு வேகத்தில் வருகிறது என்பதை எல்லாம் துல்லியமாகக் கணிக்கும் திறமை மங்கி விடுவதோடு, பார்வைத்திறனும் மங்கும். மதுபானத்தைக் கொஞ்சமாகக் குடித்தாலும்கூட உடல் சேதமடைந்து ஏறக்குறைய 60 வியாதிகள் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது என்று Nature இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை சுட்டிக்காட்டியது.

இப்பாதிப்புகள் குடிப்பவரை மட்டுமல்ல, அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களையும் கடும் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. அன்பு நேயர்களே, மது அருந்துவதால் உடலில் ஏற்படும் தீய விளைவுகளை நாம் ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி அதனை குடிமகன்களுக்கு எடுத்துச் சொல்வோம்.

1330 நாள்களாக மதுபானக் கடைகளின் முன்பாக நின்றுகொண்டு குடிமகன்களின் கால்களையும் கைகளையும் பிடித்துக் கெஞ்சிய சேலம் ஆசாத் காந்தி அவர்கள் போன்று, நாமும் ஏதாவது ஒரு வகையில் மதுவிலக்கு நடவடிக்கைகளில் இறங்க முன்வருவோம். ஒவ்வொரு சாதனையாளர் வாழ்விலும் ஒரு “நிழல் மனிதர்” இருப்பார். குடிமகன்களின் போதை தெளிய, நாம் அவர்களுக்கு நிழல் மனிதர்களாக செயல்பட்டு அவர்கள் பின்னாளில் சாதிப்பதற்கும் கருவிகளாக இருப்போம். குடிபோதை மட்டுமல்லாமல், நம் வாழ்வை ஆட்டிப் படைக்கும் எல்லாவிதப் போதைகளிலிருந்தும் வெளிவர முயற்சிப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.