2015-05-25 16:06:00

திருத்தந்தை வெளியிட்ட 89வது மறைபரப்புப்பணி ஞாயிறுச் செய்தி


திருத்தந்தை வெளியிட்ட 89வது மறைபரப்புப்பணி ஞாயிறுச் செய்தி

 

மே,25,2015 மறைபரப்புப் பணியாற்றுவதென்பது, மதமாற்றம் செய்வதோ, மறைபரப்புத் திட்டங்கள் வகுப்பதோ அல்ல; மாறாக, தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்குச் செவிசாய்த்து, உலகெங்கும் செல்வது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு அக்டோபர் 18, ஞாயிறன்று கொண்டாடப்படும் 89வது மறைபரப்புப்பணி ஞாயிறுக்கென செய்தி வெளியிட்டத் திருத்தந்தை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டில் கொண்டாடப்படும் மறைபரப்புப்பணி ஞாயிறு, நம்மை ஆழ்ந்த செபத்திற்கும், சிந்தனைக்கும் அழைக்கிறது என்று கூறினார்.

கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் இயேசுவை, தங்கள் வாழ்வால் பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'அனுப்புப்படுதல்' என்பது, இயேசுவின் வாழ்க்கையில் மையமாக அமைந்த ஓர் உண்மை என்று கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு கிறிஸ்தவரும் இவ்வுலகை மேம்படுத்த அனுப்பப்பட்டவர்கள் என்பதை உணரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றுதல் என்ற பொறுப்பு, ஒவ்வொரு கிறிஸ்தவரின் உள்ளத்தையும் ஆக்கிரமிக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இடர்களும், தடைகளும் நிறைந்த சூழல்களில், நற்செய்தியின் சாட்சிகளாக வாழ்வதே இன்றைய மறைபரப்புப்பணியின் அடித்தளம் என்று கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.