2015-05-25 15:57:00

இயேசுவின் சீடர்கள் மாற்றம் பெற்ற நாள், பெந்தகோஸ்தே


மே,25,2015. தூய ஆவியானவர் அவர்களின் வருகை நாளான பெந்தகோஸ்தே நாளன்றுதான், இயேசுவின் சீடர்கள் முற்றிலுமாக மாற்றம் பெற்றனர், ஏனெனில் அன்றுதான் அவர்களின் அச்சத்தை வீரம் மேற்கொண்டது, அவர்களின் மூடிய கதவுகள் நற்செய்தி அறிவிப்புக்கென திறக்கப்பட்டன,  அவர்களின் சந்தேகங்கள், அன்பு நிரம்பிய விசுவாசத்தால் விரட்டப்பட்டன, என ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஆவியானவரின் வருகைக்குப்பின் மாடியறையைவிட்டு வெளியேவரும் இயேசுவின் சீடர்கள், இயேசுவைக் குறித்த நற்செய்தியை அறிவிக்கும்போது அதனை அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் அவரவர் மொழியில் செவிமடுக்க தூய ஆவியானவர் உதவினார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கம் என்பது தன்னிலையில் மூடப்பட்ட ஒன்றல்ல, மாறாக எவ்வித பாகுபாடுமின்றி அனைத்தையும் அரவணைக்கும் ஒன்று என்றார்.                

திருஅவை எவருக்கும் தன் கதவுகளை மூடுவதில்லை, ஏனெனில், திரு அவை என்பது ஒரு தாய் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியின் பன்மொழி வரத்தையும், தூய ஆவியின் நெருப்பையும் பெற்றுள்ள நாமும் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கவேண்டிய கடமையைப் பெற்றுள்ளோம் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் கருணை நிறை அன்பை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது நம் பணியாகிறது எனவும் எடுத்தியம்பினார்.

தன் மூவேளை செப உரையின் இறுதியில்,  வங்காள விரிகூடாவின் அந்தமான் கடலில் அண்மையில்  இடம்பெற்ற அகதிகள் படகு விபத்து குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவர்களுக்கு அனைத்துலக நாடுகள் உதவவேண்டிய கடமையையும் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த சனிக்கிழமையன்று, சல்வதோர் நாட்டின் பேராயர் ஆஸ்கர் ரொமேரோவும், கென்யாவில் இரக்கம், அன்பு மற்றும் மகிழ்வுடன் பணியாற்றிய அருள்சகோதரி Irene Stefani  ஆகிய இருவரும் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்து, அவர்கள் இயேசுவின் பெயரால் மக்களுக்கு ஆற்றியப் பணிகளை சுட்டிக்காட்டினார்.  இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட சகாய அன்னை திருவிழாவை முன்னிட்டு சலேசிய துறவு சபையினருக்கு தன் வாழ்த்துக்களையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.