2015-05-24 10:23:00

அருளாளர் ரொமேரோ அன்பின் சக்தியால் அமைதியைக் கட்டியவர்


மே,23,2015. பேராயர் Oscar Arnulfo Romero Galdamez அவர்களை முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கும் நிகழ்வு, எல் சால்வதோர் மக்களுக்கும், திருஅவையின் சிறந்த மகன்களின் எடுத்துக்காட்டைப் பின்செல்லும் எல்லாருக்கும் மிகுந்த மகிழ்ச்சியின் ஊற்றாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரின் சான் சால்வதோரில் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் முத்திப்பேறு பெற்ற நிகழ்வுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, நாம் அனைவரும் தூய்மையிலும் மனித வாழ்வை மதிப்பதிலும், நல்லிணக்கத்திலும் வாழ்வதற்கு இந்தப் புதிய அருளாளர் அழைப்பு விடுக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெறுப்புக் கத்தியின் வன்முறையைக் கைவிட்டு, அன்பின் வன்முறையில் வாழ்வது அவசியம் என்றும், இவ்வாறு வாழ்வது, நம் மத்தியில் மிகக் கொடூரமாக நிலவும் சமத்துவமின்மைகள் மற்றும் தன்னலத்தை மேற்கொள்ள உதவும் என பேராயர் ரொமேரோ அவர்கள் கூறுகிறார் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மறைசாட்சி பேராயர் ரொமேரோ அன்பின் சக்தியால் அமைதியைக் கட்டியவர், தனது உயிரைக் கையளிக்கும் அளவுக்கு விசுவாசத்துக்குச் சான்று பகர்ந்தவர் என்றும் திருத்தந்தை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் இறை மீட்பர் பெயரைப் பெருமையுடன் கொண்டுள்ள சால்வதோர் நாடு தற்போது எதிர்நோக்கும் சவால்களுக்குப் பதில் சொல்வதற்கும், உண்மை மற்றும் தேசிய ஒப்புரவு நோக்கிச் செல்வதற்கும் இது ஏற்ற காலம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1977ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்ட ரொமேரோ அவர்கள், தனது 63வது வயதில், 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது வலது சாரி மரணப் படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இவர் எல் சால்வதோர் நாட்டில் 1980களில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சமயத்தில் மனித உரிமை மீறல்களைப் பொதுப்படையாய்க் கடுமையாய் கண்டித்தவர். ஏழைகளுக்காகக் குரல் எழுப்பியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.