2015-05-23 15:53:00

பெண்கள்குறித்த பன்னாட்டு கருத்தரங்கிற்கு திருத்தந்தை செய்தி


மே,23,2015. உரோம் நகரில் நடைபெற்றுவரும், பெண்கள் குறித்த இரண்டாவது அனைத்துலக கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பெண்களின் மாண்பைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுவரும் மக்கள் தங்களுக்கு அடுத்திருப்பவர்க்குச் செய்யும் சேவையில் மனித சமுதாயத்தின் உணர்வாலும், கருணையாலும் தொடர்ந்து வழிநடத்தப்பட தங்களை அனுமதிக்குமாறு கூறினார்.

திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்    அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், உலகின் பல்வேறு பாகங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்களையும் துன்பங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கு உலகில் பணியிடங்களில் சிலவேளைகளில் பெண்கள் இன்னும் பாகுபாடுகளையும், குடும்பங்களில் வன்முறைகளையும் எதிர்கொள்கின்றனர் என்றுரைத்துள்ள திருத்தந்தை, குடும்பமா, வேலையா இதில் எதைத் தேர்ந்துகொள்வது என்ற மனப்போராட்டத்திலும் பெண்கள் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

தண்ணீர் எடுக்க பல மைல்கள் செல்வது, குழந்தை பிறப்பின்போது இறப்பது, பாலியல் இன்பத்துக்காகக் கடத்தப்படுவது, இளவயதில் கட்டாயத் திருமணம் போன்றவற்றை ஏழை மற்றும் வளரும் நாடுகளில் பெண்கள் சந்திக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டு வரும் 2015ம் ஆண்டுக்குப் பின்னான வளர்ச்சித்திட்ட இலக்குகளுக்கு இக்கருத்தரங்கில் பேசப்படுபவை உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளியன்று உரோம் நகரில் தொடங்கியுள்ள இந்த அனைத்துலக கருத்தரங்கு இஞ்ஞாயிறன்று நிறைவடையும். உலகின் பல பாகங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.