2015-05-23 16:14:00

நேபாள மக்களுக்காக திருத்தந்தை செபிக்கிறார்


மே,23,2015. கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் அமைதியும், பாதுகாப்பும் வளமையும் நிலவ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபிப்பதாக, இந்திய மற்றும் நேபாளத் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ அவர்கள் கூறினார்.

இச்சனிக்கிழமையன்று நேபாள மக்களுக்காக Lalitpur பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிச் செபித்த பேராயர் பென்னாக்கியோ அவர்கள், திருத்தந்தையும், வத்திக்கானும் நேபாள மக்களை மிகவும் அன்பு கூருகின்றனர் என்றும், அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து அம்மக்களுடன் திருத்தந்தை மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்றும் கூறினார்.

கத்தோலிக்கர், கத்தோலிக்கர் அல்லாதவர்கள், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இத்திருப்பலியில் திருத்தந்தையின் படங்களை எல்லாருக்கும் கொடுத்த பின்னர், ஒற்றுமையில் நாட்டைக் கட்டியெழுப்புமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டார் பேராயர் பென்னாக்கியோ.

இயேசுவின் தலைமையில் ஒன்றிணைந்து வாழ அழைப்பு விடுத்த பேராயர் பென்னாக்கியோ அவர்கள், நாட்டுக்காகச் செபிக்குமாறும், ஒவ்வொருவரும் தங்களின் சக்திக்கு ஏற்ப தேவையில் இருப்பவர்க்கு உதவுமாறும் கூறினார்.    

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.