2015-05-23 15:49:00

உலகப் பொருளாதார அமைப்பில் இளையோர் அதிகம் பாதிப்பு


மே,23,2015. இக்காலத் தொழில் உலகம் முன்வைக்கும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு, கிறிஸ்தவத் தொழிலாளர்கள் இயேசு கிறிஸ்துவுக்கும், இறைவார்த்தைக்கும் தொடர்ந்து விசுவாசமாக இருந்து திருஅவையின் சமூகக் கோட்பாடுகளை தங்கள் பணிகளில் செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ACLI என்ற இத்தாலிய கிறிஸ்தவத் தொழிலாளர் கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இக்கழகத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள், அபிமானிகள் என ஏறக்குறைய ஏழாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்கழகம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறும் கூறினார்.

இன்றைய தொழில் உலகம், குறிப்பாக, இளைய தலைமுறைகள் தொழிலில் எதிர்நோக்கும் பாதுகாப்பின்மை, சட்டத்துக்குப் புறம்பே வேலை, குற்றக் கும்பலின் அச்சுறுத்தல், மனித மாண்பை இழந்த வேலை போன்றவற்றை அகற்றுவதற்கு,   வேலையில் நான்கு கூறுகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

சுதந்திரமான வேலை, படைப்பாற்றல்மிக்க வேலை, வேலையில் பங்கேற்பு, வேலையில் ஒருமைப்பாடு ஆகிய நான்கு தலைப்புகளில் தனது எண்ணங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாளும் இக்கழகத்தினர் சந்திக்கும் வேலையை இழந்தவர்கள் அல்லது வேலை தேடுபவர்களுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

தங்கள் கல்விக்கு ஏற்ற அல்லது பல்வேறு அனுபவம் பெற விரும்பி வெளிநாடுகளில் வேலை செய்யும் இத்தாலியருக்கு ஆதரவு அளிக்குமாறும், நடுத்தர வகுப்பு மக்களின் வறுமையை அகற்றுவதற்கு இக்கழகத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளில் தரமான வேலை செய்து தற்போது வறுமையில் வாழ்வோருக்கு ஆதரவு காட்டுமாறும் கூறினார் திருத்தந்தை.

இறுதியாக, கிறிஸ்தவத் தொழிலாளர்கள் இயேசு கிறிஸ்துவுக்கும், இறைவார்த்தைக்கும் தொடர்ந்து விசுவாசமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.