2015-05-21 16:07:00

அரேபிய மொழியில் வத்திக்கான் வழிகாட்டி நூல் வெளியீடு


மே,21,2015 அரேபிய நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை கூடிவருவதை உணர்ந்து, அவர்களுக்குத் தேவையான ஒரு வழிகாட்டி நூலை, அரேபிய மொழியில் உருவாகியிருக்கும் பேராயர் எட்மண்ட் பர்ஹாட் (Edmond Farhat) அவர்களை வாழ்த்துவதாக, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் எண்ணிக்கையில் கூடிவரும் அரேபியப் பயணிகளுக்கு உதவும் வகையில் பேராயர் எட்மண்ட் பர்ஹாட் (Edmond Farhat) அவர்கள் உருவாக்கியுள்ள வத்திக்கான் வழிகாட்டி நூலை, மே 20, இப்புதன் பிற்பகல் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட, கீழை வழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் லியொனார்தோ சாந்த்ரி அவர்கள் இவ்வாறு கூறினார்.

அல்ஜீரியா, லிபியா, துனிசியா, துருக்கி, உட்பட பல்வேறு அரேபிய நாடுகளில் திருப்பீடத்தின் தூதராகப் பணியாற்றி தற்போது ஒய்வு பெற்றிருக்கும் பேராயர் பர்ஹாட் அவர்கள் அரேபிய மொழியில் உருவாக்கியுள்ள இவ்வழிகாட்டி நூல் வெளியிடப்பட்ட நிகழ்வில், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வத்திக்கான் தூதர்களாகப் பணியாற்றுவோர் கலந்துகொண்டனர்.

புனித பூமியில் பணியாற்றிய அருள் சகோதரிகள், மே 17, கடந்த ஞாயிறன்று புனிதர்களாக உயர்த்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்ள வத்திக்கான் வந்திருந்த பல பயணிகள் இந்த வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.