2015-05-21 15:55:00

அடிமைத்தனம் ஒழிய அவசியம், பெண் கல்வி - கர்தினால் டர்க்சன்


மே,21,2015 சமுதாயத்திற்குக் கல்விபுகட்டுபவர்களாக பெண்களை எண்ணிப்பார்க்கவும், ஆண் பெண் உறவில், சரிநிகர் மதிப்பும், நட்பும் வளர்வதற்குரிய வழிகளைத் தேடவும், உரோம் நகரில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கு உதவும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"2015ம் ஆண்டிற்குப் பிறகு பெண்கள் முன்னேற்றத் திட்டங்கள்" என்ற தலைப்பில், மே 22, 23 ஆகிய இரு நாட்கள் உரோம் நகரில் நடைபெறவிருக்கும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு குறித்து, செய்தியாளர்களிடம் இவ்வியாழன் பேசிய திருப்பீட நீதி, அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருப்பீட நீதி அமைதி அவை, கத்தோலிக்க பெண்கள் அமைப்புக்களின் உலக ஒன்றியம், (WUCWO), வாழ்வுக்கும், குடும்பத்திற்கும் உலகப் பெண்களின் கூட்டணி (WWALF) ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கு, மே 24 ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெறும் தூயஆவியார் பெருவிழாத் திருப்பலியோடு நிறைவுறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு குடும்பத்தை மையப்படுத்தி நடைபெற்ற முதல் உலகக் கருத்தரங்கைத் தொடர்ந்து, தற்போது நடைபெறவிருப்பது இரண்டாவது உலகக் கருத்தரங்கு என்று குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், பெண்கள் எவ்விதம் பலவழிகளில் அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்ற கருத்தில் இக்கருத்தரங்கின் அமர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தார்.

"இனி அடிமைகள் அல்ல, உடன்பிறப்புக்களே" என்ற மையக்கருத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  2015ம் ஆண்டுக்குரிய அமைதிச் செய்தியை வெளியிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நவீன அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு மிகவும் அவசியமானது, பெண்களின் கல்வி என்பதை நடைபெறவிருக்கும் கருத்தரங்கு வலியுறுத்தும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.