2015-05-20 16:25:00

ரொஹிங்கியா மக்களில் 3000 பேருக்கு, பிலிப்பின்ஸ் புகலிடம்


மே,20,2015. மியான்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்துள்ள ரொஹிங்கியா (Rohingya) இன மக்களில் 3000 பேருக்கு, பிலிப்பின்ஸ் அரசும், அந்நாட்டுத் தலத்திருஅவையும் புகலிடம் கொடுக்கத் தீர்மானித்துள்ளன.

உள்நாட்டு மோதல்கள் காரணமாக, தங்கள் நிலங்களையும், குடியிருப்புக்களையும் விட்டுத் துரத்தப்பட்டுள்ள ரொஹிங்கியா இன மக்களை வரவேற்பது பிலிப்பின்ஸ் நாட்டின் கடமை என்று, அந்நாட்டு தொடர்புத் துறை அமைச்சர், ஹெர்மினியொ கொலோமா (Herminio Coloma) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

துரத்தப்பட்டுள்ள இம்மக்களில் பலர் இஸ்லாமியர் என்ற எதார்த்தம், இவர்களுக்குப் புகலிடம் தரும் எண்ணத்தை எவ்வகையிலும் பாதிக்கவில்லை என்று கூறிய, பிலிப்பின்ஸ் பாப்பிறை மறைபரப்புப் பணி கழகத்தின் இயக்குனர் அருள்பணி சாக்ரடீஸ் மேசியோனா (Socrates Mesiona) அவர்கள், பிலிப்பின்ஸ் அரசு எடுத்துள்ள இந்த மனிதாபிமான முடிவுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக கடலில் தத்தளித்து வரும் இம்மக்களை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், பிலிப்பின்ஸ் நாடு இந்த அவசரகால முடிவை எடுத்துள்ளது என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

1970களில் வியட்நாம் போர் நிகழ்ந்த வேளையில், "படகு மக்கள்" என்று அழைக்கப்பட்ட வியட்நாம் அகதிகளை, பிலிப்பின்ஸ் நாடு வரவேற்று புகலிடம் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.