2015-05-20 16:21:00

பேராசையின் அடிப்படையில் உருவாகும் பொருளாதாரம், ஆபத்து


மே,20,2015. உலகில் பல விடயங்கள் மிகத் துரிதமாக மாறிவருகின்றன; ஆயினும், மனித மனதில் எழும் வியப்பு, நன்றி போன்ற உணர்வுகள் மாறுவது இல்லை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

'புதிய காலநிலை பொருளாதாரம்' என்ற தலைப்பில், மே 20, இப்புதனன்று உரோம் நகரின் திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய திருப்பீட நீதி அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இறைவனின் படைப்பை வியந்து போற்றும் அதே வேளையில், அதனைப் பேணிக் காப்பதும் மனிதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு முக்கியப் பொறுப்பு என்று கூறினார்.

நன்றி உணர்வும், கடமை உணர்வும் மனிதர்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் என்பதை கத்தோலிக்கத் திருஅவை தன் சமுதாயப் படிப்பினைகளில் வலியுறுத்தியுள்ளன என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நல்ல உற்பத்திப் பொருள்கள், நல்ல வேலை, நல்ல செல்வம் என்ற மூன்று எண்ணங்களில், தன் உரையை வழங்கினார்.

ஒரு கொடையாக நமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பூமிக் கோளத்தின் இயற்கை வளங்களை தேவைக்கு அதிகமாக உறுஞ்சி, நமது உற்பத்திப் பொருள்களைப் பெருக்கும்போது, இறைவனின் படைப்பை நாம் சீரழிக்கிறோம் என்ற எச்சரிக்கையை கர்தினால் டர்க்சன் அவர்கள் முன்வைத்தார்.

சுயநலம், பேராசை என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் பொருளாதாரம், சமுதாயச் சமன்பாட்டை சீர்குலைத்து, நாம் வளர்க்க விரும்பும் 'பசுமைப் பொருளாதாரத்தை'யும் அழிக்கிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள், மறுசுழற்சி செய்யப்படக் கூடிய சக்தியை தங்கள் அலுவலகங்களில் பயன்படுத்துவதற்கு தன் மகிழ்வை வெளியிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், இத்தகையப் பாதையை அனைத்து உலக நிறுவனங்களும் தேர்ந்தால், வளமையான எதிர்காலம் அனைத்து மக்களுக்கும், படைப்பு அனைத்திற்கும் உறுதி செய்யப்படும் என்று தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.