2015-05-20 16:25:00

'புதிய காலநிலை பொருளாதாரம்' கருத்தரங்கில் கர்தினால் வேர்ல்


மே,20,2015. படைப்பு அனைத்தையும் மனிதர்கள் ஆளட்டும் என்று இறைவன் தொடக்க நூலில் கூறியதை நாம் சரிவரப் புரிதுகொள்ளவேண்டும் என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கூறிவருகின்றனர் என்று வாஷிங்டன் பேராயர், கர்தினால் டோனல்ட் வேர்ல் (Donald Wuerl) அவர்கள் கூறினார்.

'புதிய காலநிலை பொருளாதாரம்' என்ற தலைப்பில், மே 20, இப்புதனன்று உரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் கலந்துகொண்ட கர்தினால் வேர்ல் அவர்கள், படைப்பின் மீது மனிதர்கள் காட்டவேண்டிய பொறுப்புணர்வைக் குறித்துப் பேசினார்.

உலக வரலாற்றில் நிகழும் மாற்றங்களை மனதில் கொண்டு, திருஅவையின் படிப்பினைகளும், திருத்தந்தையரின் சுற்றுமடல்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன என்று கூறிய கர்தினால் வேர்ல் அவர்கள், தன் கருத்தை வலியுறுத்த, திருத்தந்தை புனித 23ம் யோவான், திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பவுல், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் ஆகியோர் விடுத்த மடல்களையும் மேற்கோளாகக் காட்டினார்.

உலகப் பொருளாதாரம், அறிவியல், அரசியல் என்ற துறைகளில் திருஅவை காட்டிவரும் ஈடுபாடு, தனிமனிதரின் மாண்பு, இயற்கை பாதுகாப்பு, என்ற இரு முக்கிய விழுமியங்களின் அடிப்படையில் வெளிப்படுகிறது என்று கர்தினால் வேர்ல் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.