2015-05-20 16:31:00

உலக அரசுகளிடையே வெளிப்படையான கூட்டுறவு முயற்சிகள் தேவை


மே,20,2015. நடைபெறும் 2015ம் ஆண்டு, உலகச் சமுதாயம் அடைந்துள்ள மில்லேன்னிய இலக்குகளை தொடர்ந்து பாதுகாக்க, உலக அரசுகளிடையே இன்னும், வெளிப்படையான, தெளிவான கூட்டுறவு முயற்சிகள் தேவை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"2015ம் ஆண்டையும் தாண்டி, உலக அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள்" என்ற தலைப்பில், மே 19, இச்செவ்வாயன்று நியூ யார்க் நகரில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னதித்தோ அவுசா (Bernardito Auza) அவர்கள் உரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.

உலக அரசுகளிடையே கூட்டுறவு முயற்சிகள் இடம்பெறுவதற்கு முக்கியத் தேவை, இந்த முயற்சிகளை அரசுகள், எவ்வித கட்டாயமும் இன்றி, முன்வந்து மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்தக் கூட்டுறவு முயற்சியில், வளரும் நாடுகளின் அவசரத் தேவைகளும், அடிப்படைத் தேவைகளும் முன்னிலை வகிக்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் முன்வைத்தார்.

இந்த முயற்சிகளின் முடிவுகளை அளக்கும்போது, மனிதர்களின், குறிப்பாக வறியோரின் ஒட்டுமொத்த நன்மை, என்ற அளவுகோல் பயன்படுத்தப்படவேண்டும் என்றும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் பரிந்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.