2015-05-19 15:35:00

விவிலியத் தேடல் – திருமண விருந்து உவமை – பகுதி - 3


அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் கென்னடி அவர்கள், ஒரு நாள், வெள்ளை மாளிகையில், சிறப்பு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அமெரிக்காவில், கலைத்துறையில் மிகவும் புகழ் பெற்றவர்களை மட்டும் அந்த விருந்துக்கு அழைத்திருந்தார். அவர்களில் ஒருவர், வயதில் முதிர்ந்த William Faulkner என்ற தலை சிறந்த எழுத்தாளர். அரசுத்தலைவர் கென்னடியிடமிருந்து வந்திருந்த அந்த அழைப்பைக் கண்டதும், வில்லியம் அவர்கள், "எனக்கு அதிக வயதாகிவிட்டது. எனவே, புது நண்பர்களை உருவாக்க எனக்கு விருப்பமில்லை" என்று பதில் சொல்லி, அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

இப்படி ஓர் அரிய வாய்ப்பை வில்லியம் அவர்கள் மறுத்துவிட்டாரே என்று நாம் எண்ணலாம். அழைப்பை ஏற்க மறுத்ததற்கு அவர் சொன்ன காரணம் நமக்கு எரிச்சல் மூட்டலாம். வில்லியம் அவர்களைப் பற்றி நம் தீர்ப்புகளை வழங்குவதற்கு முன், நம்மைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போமே. வாழ்வில் நமக்கு வந்துள்ள அழைப்புக்கள், அந்த அழைப்புக்களுடன் நமக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் எத்தனை, எத்தனை... இந்த  அழைப்புக்களையும் வாய்ப்புக்களையும் ஏற்க மறுத்த நேரங்கள் எத்தனை, எத்தனை... இவற்றைச் சிந்திக்க, திருமண விருந்து உவமை நம்மை அழைக்கின்றது. அழைப்பும், மறுப்பும் என்ற கோணத்தில் இவ்வுவமையில் நம் தேடலைத் தொடர்வோம். இந்த உவமையின் ஆரம்ப வரிகளே, சங்கடம் தரும் வரிகளாக ஒலிக்கின்றன:

மத்தேயு நற்செய்தி 22: 2-4

அக்காலத்தில் இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை" என்று இயேசு திருமண விருந்து உவமையைத் துவக்கினார். அரசர் நடத்தும் திருமண விருந்து, ஒரு நாள், ஒருவேளை விருந்து அல்ல. அது, ஒரு சில நாள்கள் நீடிக்கும் விருந்து. அவ்வகை விருந்தை ஏற்பாடு செய்த அரசர், அழைப்பு பெற்றவர்களை கூட்டிவர பணியாளர்களை அனுப்பினார்.

அரசர் விருந்தளிக்கிறார், அந்த விருந்துக்குத் தாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரும் மனிதர்கள், விருந்து நாளை தங்கள் நினைவில் ஆழமாகப் பதித்துக் கொள்வர். அந்த நாள் வந்ததும், மறு அழைப்புக்குக் காத்திராமல், விருந்தில் கலந்துகொள்ளச் செல்வர். மிக முக்கியமான, தவிர்க்கமுடியாத, இறுதிநேர அவசரக் காரணங்கள் இன்றி, இத்தகைய வாய்ப்பை யாரும் தவறவிடமாட்டார்கள்.

இந்த உவமையிலோ, இரண்டாவது, மூன்றாவது அழைப்புகள் சென்றபிறகும், அழைக்கப்பட்டவர்கள், விருந்தைத் தவற விடுகின்றனர், தவறும் செய்கின்றனர். அவர்கள் இவ்விதம் நடந்துகொள்வது, வினோதமாக, உள்ளது. மற்றொரு கோணத்தில் சிந்தித்தால், இது விபரீதமாகவும் தெரிகிறது. அழைக்கப்பட்டவர்கள் நடந்துகொண்ட விதத்தை இயேசு இவ்விதம் விவரிக்கிறார்:

மத்தேயு நற்செய்தி 22: 5-6

அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.  

அழைப்பைக் கொணர்ந்த பணியாளர்களை அலட்சியப்படுத்துவது ஒரு புறம் எனில், அவர்களை இழிவுபடுத்தி, கொலை செய்வது கொடுமையின் உச்சநிலை. அரசனின் அழைப்புச் செய்தியைச் சுமந்து செல்லும் பணியாளர்கள் கொல்லப்படும் கொடுமையைப் பற்றிக் கேட்கும்போது, மற்றொரு எண்ணம் மனதில் பதிகிறது. இறைவனின் செய்தியை சுமந்து வந்த இறைவாக்கினர்களை இஸ்ரேல் மக்கள் அலட்சியப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களைக் கொன்றனர் என்று இயேசு வருத்தத்துடன் கூறும் வார்த்தைகள் நம் நினைவில் நிழலாடுகின்றன. இவ்வார்த்தைகளை மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்தியாளர்களும் பதிவு செய்துள்ளனர்:

மத்தேயு 23: 37 / லூக்கா 13: 34

'எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே!'

திருமண விருந்து உவமையை எருசலேம் கோவிலிலிருந்து, இயேசு சொல்வதாக ஒரு சூழலை, நற்செய்தியாளர் மத்தேயு அமைத்திருப்பது, இந்த வார்த்தைகளுக்கு இன்னும் சிறிது ஆழத்தைத் தருகிறது. இறையரசு என்ற திருமண விருந்தில் கலந்துகொள்வதற்கு அழைப்பைக் கொணர்ந்த இயேசுவும், தான் எருசலேமில் கொல்லப்படப் போவதை இந்த உவமை வழியே, சொல்லாமல் சொல்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அழைக்கப்பட்டவர்கள் காட்டிய அலட்சியமும், பகைமை உணர்வும் விபரீதமாக மாறின என்பதை, நற்செய்தியாளர் மத்தேயு இவ்விதம் கூறியுள்ளார்:

மத்தேயு நற்செய்தி 22: 7-9

அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார்.

விருந்துக்கு வந்த அழைப்பை அலட்சியப் படுத்தியவர்களைக கண்டு, கோபமடையவோ, பரிதாபப்படவோ நாம் ஆரம்பித்திருந்தால், கொஞ்சம் நிதானிப்போம். நாம் எத்தனை முறை, எத்தனை வழிகளில் அழைப்புக்களை ஏற்க மறுத்துள்ளோம் என்பதை ஆய்வு செய்யலாம்.

புதிரான ஒரு நிகழ்வுடன் இந்த உவமை நிறைவடைகிறது. திருமண உடை அணியாத ஒருவரை, அரசர் தண்டிக்கும் இந்த நிகழ்வு, மத்தேயு நற்செய்தியில் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. நான் துறவற வாழ்வில் அடியெடுத்து வைத்த காலங்களில், உவமையின் இறுதிப் பகுதியை வாசித்தபோது, குழம்பிப் போனேன். விருந்து மண்டபத்தில் நடைபெறும் அச்சம்பவம், என்னைக் கோபம் கொள்ள வைத்தது. இதோ அப்பகுதி:

மத்தேயு நற்செய்தி 22: 10-13

பணியாளர்கள் வெளியே சென்று, வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது, அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார்.

தான் அழைத்தவர்கள் வரவில்லை என்பதால், அரசன், சாலையோரங்களில் காணும் அனைவரையும் கூட்டிவரச் சொன்னார். அப்படியே நல்லோர், தீயோர் யாவரும் வந்து சேர்ந்தனர்... விருந்து மண்டபம் நிரம்பி வழிந்தது. அந்நேரத்தில் அங்கு வரும் அரசன், அங்கிருந்த ஒருவர் திருமண ஆடை அணியாததைக் கண்டு கோபம் கொள்கிறார். அவருக்குத் தண்டனையும் வழங்குகிறார். மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது  அநியாயமாகத் தெரிகிறது. தெருவோடு போன ஒருவரை வீட்டுக்குக் கூட்டிவந்து, அவர் சரியான உடை அணியவில்லை என்று கூறி, அவரை தண்டிப்பதா? பல ஆண்டுகளுக்கு முன் இதை நான் படித்தபோது, உவமையில் சொல்லப்பட்டிருந்த அரசன் மீது கோபம் கொண்டேன். ஆனால், இஸ்ரயேல் மக்களின் கலாச்சாரத்தைக் கொஞ்சம் ஆராய்ந்தபின், இந்த நிகழ்வை இன்னும் சற்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

இஸ்ரயேல் மக்கள் வீடுகளில் விருந்துண்ண செல்லும்போது, வாசலருகே தொட்டிகளில் உள்ள நீரை எடுத்து, விருந்தினர் ஒவ்வொருவரும் தங்கள் கரங்களையும், கால்களையும் சுத்தப்படுத்திய பிறகே வீட்டுக்குள் செல்லவேண்டும். வீட்டிற்குள் நுழைந்ததும், நறுமணத் தைலம் கரங்களிலும், தலையிலும் பூசப்படும். இவை அனைத்தும் இணைந்து, தூய்மைப்படுத்தும் சடங்கு என்று அழைக்கப்பட்டது.

யோவான் நற்செய்தி 2ம் பிரிவில் காணப்படும் 'கானாவில் திருமணம்' என்ற நிகழ்வில் கூறப்பட்டுள்ள ஒரு வாக்கியம், தூய்மைப்படுத்தும் இச்சடங்கினை உறுதி செய்கிறது. "யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல் தொட்டிகள் அங்கே இருந்தன" (யோவான் 2:6) என்று நாம் வாசிக்கிறோம். திருமண விருந்தில் திராட்சை இரசம் தீர்ந்துபோனது என்று அன்னை மரியா இயேசுவிடம் கூறியபோது, அந்தத் தொட்டிகளில் நீர் நிரப்பச் சொல்லி, அதை, இயேசு இரசமாக மாற்றினார் என்பது நமக்கு நினைவிருக்கலாம். எனவே, யூதர்களின் இல்லங்களில் நுழைவதற்கு முன், ஒருவர் தன்னையே தூய்மைப்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அப்படி சுத்தப்படுத்திக் கொள்ளாமல் உள்ளே நுழைவது, அழைத்தவரை அவமதிப்பதற்குச் சமம்.

அதேபோல், வந்திருக்கும் விருந்தினருக்கு தண்ணீரும் தைலமும் தரப்படவில்லையெனில், வீட்டு உரிமையாளர், விருந்தினரை அவமதிப்பது போல அமையும். இதை நாம் லூக்கா நற்செய்தி, 7ம் பிரிவில் வாசிக்கிறோம். தன்னை விருந்துக்கு அழைத்திருந்த சீமோன் என்ற பரிசேயர், தூய்மைப்படுத்தும் சடங்கை சரிவரச் செய்யவில்லை என்றும், அவர் செய்ய மறந்ததை, பாவியான ஒரு பெண் தனக்குச் செய்தார் என்றும் இயேசு கூறும் வார்த்தைகள், யூதர்கள் மத்தியில் விருந்தினருக்கு வழங்கப்படும் வரவேற்பை விளக்குகின்றன. (லூக்கா 7: 44-46)

அரசன் அளிக்கும் விருந்து என்றால், விருந்துக்கு வரும் ஒவ்வொருவரும் தங்களையே சுத்தம் செய்து, நறுமணத் தைலம் பூசிக்கொள்வதோடு, கொடுக்கப்படும் சிறப்பான உடையையும் அணிந்து கொள்ள வேண்டும். சாலையோரத்திலிருந்து திரட்டப்பட்ட மக்கள் என்றாலும், ஒவ்வொருவரும் தங்களையே சுத்தப்படுத்திக்கொண்டபின், தரப்பட்ட ஆடைகளை அணிந்தபின்னரே விருந்துண்ணும் இடத்திற்குச் செல்லவேண்டும். இந்தப் பழக்கங்கள் பிடிக்காதவர்கள் விருந்துக்குச் செல்லாமல் இருந்திருக்க வேண்டும். விருந்துக்கும் சென்று, அங்கு கடைபிடிக்க வேண்டிய முறைகளைக் கடைபிடிக்காமல் இருப்பது, அழைத்த அரசனை அவமதித்ததாகக் கருதப்படும். எனவேதான், திருமண ஆடை அணியாத அந்த மனிதர் மீது அரசன் அவ்வளவு கோபம் கொண்டார் என்று நான் பின்னர் படித்து அறிந்து கொண்டேன்.

இறைவன் தரும் அழைப்பு, நம் வாழ்வில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதை  ஏற்பதும், அலட்சியப்படுத்துவதும் நாம் எடுக்கும் முடிவு. அவரது அழைப்பை ஏற்ற பின்னரும், விருந்தில் கலந்துகொள்ளும் பக்குவத்துடன் அங்கு நுழைய வேண்டும் என்பதும், திருமண விருந்து உவமை வழியே இயேசு நமக்கு முன் வைக்கும் ஒரு சவால். இறைவன் தரும் அழைப்பிலும் பல எதிர்பார்ப்புக்கள், சவால்கள், கடமைகள் இருக்கின்றன. இறைவன் அழைப்பைப் பெற்றுவிட்டோம் என்ற உரிமையை மட்டும் பெரிதுபடுத்தி, அழைப்புடன் வரும் கடமைகளை ஒதுக்கிவிடுவது, அல்லது அலட்சியப்படுத்துவது, அழைத்த இறைவனையே அலட்சியப்படுத்துவதற்கு சமமாகும்.

திருமண விருந்து உவமையின் முத்தாய்ப்பாக, மகுடமாக இயேசு கூறும் வார்த்தைகள்: "அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்." (மத்தேயு நற்செய்தி 22: 14) அந்தச் ‘சிலரி’ல் ஒருவராக நாமும் அழைப்பை ஏற்போம்; இறைவன் வழங்கும் ஆனந்த விருந்தில் தகுந்த முறையில் பங்கேற்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.