2015-05-19 15:51:00

வாழ்வில் இறுதி வழியனுப்பும் நிகழ்வு நம் அனைவருக்கும் உள்ளது


மே,19,2015. தங்கள் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்படும் மியான்மாரின் ரோஹிஞ்சா இன மக்கள், சிரியா மற்றும் ஈராக்கின் கிறிஸ்தவர்கள், யஜிதி இன மக்கள் போன்று நம் வாழ்வில் பிரியாவிடைகளும், இறுதி வழியனுப்பு நிகழ்வுகளும் உள்ளன என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்வில் இறுதி வழியனுப்பும் நிகழ்வு நம் அனைவருக்காகவும் காத்திருக்கின்றது, அந்நேரத்தில் நாம் நம் ஆன்மாவையும், நம் கதையையும், நாம் அன்பு கூர்ந்தவர்களையும் இறைவனிடம் அர்ப்பணிக்கின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை  நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில், இயேசு சிலுவைத் துன்பங்களை அனுபவிப்பதற்குமுன் அவர் ஆற்றிய இறுதி பிரியாவிடை உரை, புவலடிகளார் எருசலேமுக்குச் செல்வதற்கு முன்னர் மிலேத்துவில் ஆற்றிய பிரியாவிடை உரை ஆகிய இரண்டையும் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்த கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம் ஒவ்வொருவர் வாழ்வின் இறுதிப் பயணம் பற்றிப் பேசினார்.

இயேசுவும் பவுலும் பிரியாவிடை பெறுகின்றனர், இந்நிகழ்வுகள், நாம் இவ்வுலகைவிட்டுப் பிரிவது குறித்துச் சிந்திப்பதற்கு உதவுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, நம் வாழ்வில் பல சிறிய, பெரிய பிரியாவிடைகள் உள்ளன, அவற்றில் சில, சிலரில் அதிகத் துன்பத்தையும், கண்ணீரையும் வரவழைக்கின்றன என்று கூறினார்.

மியான்மாரின் ஏழை ரோஹிஞ்சா இன மக்களை இன்று நினைத்துப் பார்ப்போம், அடக்குமுறைக்குப் பயந்து, அவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும்போது, என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது, மாதக்கணக்கில் படகில் பயணம் செய்கின்றனர், ஒரு நகரைச் சென்றடையும்போது, இங்கிருந்து சென்றுவிடுங்கள் என திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.     

நம் இறுதி நேரம் எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது, நாம் நம்மையே இறைவனிடம் கையளிக்கத் தயாரா என்ற கேள்வியையும் முன்வைத்தார் திருத்தந்தை.

மேலும், “இறைவன் எப்போதும் நமக்காகக் காத்திருக்கிறார், நம்மை எப்போதும் புரிந்துகொள்கிறார், அவர் நம்மை எப்போதும் மன்னிக்கிறார்” என்ற வார்த்தைகளை இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.