2015-05-19 16:05:00

மிலான் எக்ஸ்போ 2015ல் காரித்தாஸ் தினம்


மே,19,2015. குறுநில விவசாயிகளுக்கு, குறிப்பாக, காலநிலை மாற்றத்திற்கேற்ப அவர்கள் செய்யும் விவசாயத்தில் உதவிகளைச் செய்வதன் வழியாக உலகில் நிலவும் பசிக்கொடுமையை அகற்ற முடியும் என்று அனைத்துலக காரித்தாஸ் நிறுவன ஆய்வறிக்கை கூறுகிறது.

இத்தாலியின் மிலானில் நடைபெறும் எக்ஸ்போ 2015 உலகக் கண்காட்சியில் இச்செவ்வாயன்று காரித்தாஸ் நாளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்த அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் கர்தினால் லூயிஸ் தாக்லே,  அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிகெஸ் மாராதியாகா ஆகிய இருவரும் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.

உலகின் மக்கள் தொகையில் 83 விழுக்காட்டினரைக் கொண்டிருக்கும் நாடுகளின் தேசிய கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனங்கள் மற்றும் 98 காரித்தாஸ் அமைப்புகள் நடத்திய இந்த ஆய்வறிக்கையில், உணவுப் பாதுகாப்பின்மைக்கு மூன்று முக்கிய காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

நிலம், விதைகள், கடன் உதவிகள், உற்பத்திப் பொருள்களை விற்பதற்குச் சந்தைகள் போன்ற வளங்கள் குறுநில விவசாயிகளுக்குக் குறைவுபடுவது, வேளாண்மையில் குறைவான உற்பத்தி, காலநிலை மாற்றம் ஆகிய மூன்றும் முக்கிய காரணங்களாக அவ்வறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.

தேசிய காரித்தாஸ் நிறுவனங்கள் வழங்கிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களால் 2013ம் ஆண்டில் பத்து கோடியே அறுபது இலட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்குப் பயிற்சி, வேளாண் உற்பத்திப் பெருக்கம், ஊட்டச்சத்து உணவை மேம்படுத்துதல், அவசரகாலங்களுக்குப் பின்னர் உணவுப் பொருள்கள் அல்லது விதைகள் விநியோகம் போன்ற பணிகளை தேசிய காரித்தாஸ் நிறுவனங்கள் ஆற்றியதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.