2015-05-19 15:55:00

பொதுநிலையினர் ஆற்ற வேண்டிய பணியில் உருவாக்கப்பட வேண்டும்


மே,19,2015. வரலாற்றில் துன்பம் நிறைந்த இக்காலக் கட்டத்தில், மனிதரின் தனித்துவத்தையும் மாண்பையும் மனிதரிலிருந்து நீக்கிவிடும் கருத்தியல் ஆக்ரமிப்பிலிருந்து இறைமக்களை ஆயர்கள் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய ஆயர் பேரவையின் 68வது பொது அவையை இத்திங்கள் மாலை தொடங்கி வைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊழல் கலாச்சாரத்துக்கு எதிரான தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.

மனத்தாழ்மை, கருணை, இரக்கம், தெளிவான செயல், மெய்யுணர்வு ஆகிய கிறிஸ்துவின் மனநிலைகளை உள்ளடக்கிய திருஅவை உணர்வில் வாழ வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் கூறிய திருத்தந்தை, ஊழல் நடவடிக்கைகளை மக்கள் தவிர்த்து நடக்கவும் கேட்டுக்கொண்டார்.

குடும்பங்கள், ஓய்வூதியம் பெறுகிறவர்கள், நேர்மையான தொழிலாளர்கள், கிறிஸ்தவ சமூகங்கள், இளையோர் வாழ்வு ஆகியவற்றைப் பாதிக்கும் ஊழல்களை முறியடிப்பதிலும், அவற்றுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பதிலும் திருஅவை செயல்பட வேண்டியது பற்றியும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

திருஅவை மற்றும் மேய்ப்புப்பணி உணர்வு பற்றி உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவப் பயிற்சி மூலம் பொதுநிலையினருக்கு ஆதரவு வழங்குவதால் அவர்கள், பொது வாழ்வில் தங்களின் பொறுப்புக்களைச் செயல்படுத்துவார்கள் என்றும் கூறினார்.

இம்மாதம் 18 முதல் 21 வரை கூட்டம் நடத்தும் இத்தாலிய ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Evangelii Gaudium அதாவது நற்செய்தியின் மகிழ்வு என்ற திருத்தூது அறிக்கை நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.