2015-05-19 16:22:00

உலகத் தொழிலாளரில் பலர் பகுதி நேரப் பணியாளர்கள்


மே,19,2015. உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் பாதுகாப்பின்மை பரவலாகக் காணப்படுவதாகவும், உலகில் வேலை செய்பவரில் ஏறக்குறைய 75 விழுக்காட்டினர் எந்தவித ஒப்பந்தங்களுமின்றி, தற்காலிக முறையில் அல்லது குறைந்த கால ஒப்பந்தத்தில் வேலை செய்கின்றனர் எனவும் ILO உலக தொழில் நிறுவனம் எச்சரித்துள்ளது.

“உலக வேலைவாய்ப்பும் சமூகப் பார்வையும் 2015” என்ற தலைப்பில், உலகின் 84 விழுக்காட்டுத் தொழிலாளர்களை வைத்து இத்திங்களன்று ஆண்டறிக்கை வெளியிட்ட ILO நிறுவனம், பகுதி நேரத் தொழிலாளரில் பலர் பெண்கள் என்றும் கூறியுள்ளது.

இக்காலத்தில் வேலைவாய்ப்பில் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை, பல தொழிலாளர்களைப் பாதித்துள்ளது என்றுரைத்த ILO நிறுவன இயக்குனர் Guy Ryder அவர்கள், ஊதியம் வாங்கும் தொழிலாளர்களில் 42 விழுக்காட்டினர் மட்டுமே நிரந்தர ஒப்பந்தத்தில் வேலை செய்கின்றனர் என்று தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளிலும், மத்திய மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவிலும் பத்துப் பேருக்கு எட்டுப் பேர் ஊதியத்துக்கு வேலை செய்பவர்கள், அதேநேரம், தெற்கு ஆசியாவிலும் ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதியிலும் பத்துப் பேருக்கு இருவர் ஊதியத்துக்கு வேலை செய்பவர்கள் என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.