2015-05-18 15:26:00

வாரம் ஓர் அலசல் – பணம் பற்றிய புரிதல் இல்லையென்றால்...


மே,18,2015. இயக்குனர் பாலாஜி அவர்கள் கடந்த ஆண்டு இயக்கிய, 'நிறம்' என்ற நான்கு நிமிடக் குறும்படம் இப்படி நகர்கிறது. சென்னையில் கடைகள் சூழ்ந்துள்ள வீதியில், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அந்தப் பகுதியில் கடந்து செல்வோர், காசு கொடுத்தாலும் அதைப் பயன்படுத்தத் தெரியாத மனநிலை. டீக்கடை, ஓட்டல்களில் உணவு கேட்டு கையேந்தும்போது, அவர்கள் எரிச்சல் அடைந்தாலும், அரைமனதோடு கொடுக்கின்றனர். அவரது புகலிடம் குப்பைத் தொட்டி அருகேதான். சாலையில் கிடந்த, 500 ரூபாய் நோட்டை எடுத்து, அதன் மதிப்புத் தெரியாமல், கண் குளிர பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஐ.டி., துறையில் பணி புரியும் இளைஞர் ஒருவர், அருகில் உள்ள சாலையோரக் கடையில் காலை உணவு உண்கிறார். திரும்பிச் செல்லும்போது, மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் இருக்கும் ஐந்நூறு ரூபாயைப் பார்க்கிறார். யாராவது தன்னைப் பார்க்கின்றனரா என, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர் அருகில் சென்று, தன்னிடம் இருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, 500 ரூபாயைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பறக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர், ஐந்து ரூபாய் நாணயத்தைக் கீழே போட்டுவிட்டு, தனக்கான உலகத்தில் வாழ்கிறார். அலுவலகம் சென்று கொண்டிருக்கும் அந்த ஐ.டி. இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத தெருவில், வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்கிறார். முடிந்ததும் திரும்பிப் பார்க்கிறார், வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணனி இருந்த பையைக் காணவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் தான் செய்த செயலை நினைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்து செல்கிறார். பல்வேறு அமைப்புகளின் பாராட்டைப் பெற்றுள்ள இக்குறும்படம் பற்றி தினமலர் நாளிதழிலும் வாசித்தோம்.  பணத்தைப் பார்த்ததும், தன்நிலை மறந்து, மனிதர் நிறம் மாறுவது குறித்து, நான்கே நிமிடங்களில் வசனமே இல்லாமல் காட்சி மூலம் மட்டுமே இது சித்திரிக்கப்பட்டுள்ளது.

பணம் இல்லையென்றால் வாழ்வு இல்லை, பணம் கைமாறாமல் எந்த அலுவலகத்திலும் எந்தக் கோப்புமே நகராது என்பது இன்றைய எதார்த்தம். அதுவும் புதிய கல்வியாண்டு தொடங்கும் ஜூன் மாதத்தில், பிள்ளைகளைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்ப்பதற்கும், வேலைகளில் அமர்த்துவதற்கும் பணம்தான் பரவலாகப் பேசுகின்றது. இதில் இடைத்தரகர்களின் பணப் பைகளும் நிரம்பி விடுகின்றன. எப்படியாவது கடன் வாங்கி, இருக்கின்ற நகைகளை அடகு வைத்து பிள்ளைகளைச் சிறந்த பள்ளிகளில் பெற்றோர் சேர்க்கின்றனர், அதேபோல் ஆசிரியப் பணிக்கும், பிற வேலைகளுக்கும் பணம்தான் பேசுகிறது. இப்படி, பணம் நம் அன்றாட வாழ்வுக்கு அடிப்படை, அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் இந்தப் பணத்தின்மீது பேராசை எழும்போதுதான் ஆபத்தே ஆரம்பிக்கின்றது.

'நிறம்' குறும்படத்தின் இயக்குனர் பாலாஜி அவர்களும், பணம் நமக்குத் தேவையாக இருந்தாலும், பணம் குறித்த புரிதல் இல்லாமல், அதுதான் வாழ்க்கை என நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், சாதாரண மனிதர் முதல் அரசியல்வாதிகள் வரை, பணத்தின் மீதுள்ள பேராசை மட்டும் மனிதரிடமிருந்து விலகுவதில்லை. அதற்காக, உறவுகள், நண்பர்கள், பணிபுரியும் இடங்கள் என, எல்லாரையும் நோகடித்து, சுகமான வாழ்வை இழக்கிறோம். பணம், உயிரைப் பறித்த சம்பவங்களும், நம்மைச் சுற்றி அரங்கேறி கொண்டிருக்கின்றன

என்று கூறியிருக்கிறார். கடந்த வாரத்தில் வெளியான ஒரு நீதிமன்றத் தீர்ப்பு தமிழக மக்கள் பலரில் எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. பணம்தான் பலவற்றிலும், பல இடங்களிலும் பேசுகின்றது. இதற்காக நிறம் மாறுவதற்கு மனிதர் அஞ்சுவதில்லை. பணத்திற்காகச் சிசுக்களை விற்ற பெற்றோர், தாதியர் கைது, பணத்திற்காக தனது மகளை அல்லது தனது மனைவியை பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய கணவர் அல்லது மனைவி கைது, ஆயுள்காப்பீட்டு நிதி கிடைப்பதற்காக தனது மனைவியைக் காரை ஏற்றிக்கொன்ற காவல்துறை பணியாளர் கைது, பணத்திற்காக பெற்ற தாயையே கொலை செய்த மகன், பணத்திற்காக குழந்தைகள் கடத்தல், பணத்திற்காக தமிழக மீனவர்களைக் கடத்திய இலங்கை மீனவர்கள்...இப்படி பலதரப்பட்ட செய்திகளை தினமும் வாசிக்கிறோம். அரசியலில் பணம் அனைவரையும் ஆட்டி வைக்கிறது, ஆடவும் வைக்கின்றது. பிலிப்பைன்ஸ் ஆயர்கள், அந்நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, பதவிக்காக விற்கப்படும் வாக்குகளை பண ஆசையில் வாங்காதீர்கள் என இப்போழுதே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

“பணத்திற்காக வெளிநாட்டில் பாசத்தை இழந்தோர் சங்கம்” என்ற முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சில வரிகளை இப்போது கேட்போமா..

ஓடி ஓடி உழைத்தாலும், கையும் காலும் விறைத்தாலும், அன்பாகப் பேச யாருமில்லை, காசு என்பது நிக்கவில்லை, கடன்தொல்லை தீரவில்லை, சொன்னால் யாரும் நம்புவதில்லை. மொழிப் பிரச்சனை, வேலைப் பிரச்சனை, சாப்பாடு பிரச்சனை, ஊருக்குப் போன் செய்தால் குடும்பப் பிரச்சனை என்று இருவர் எழுதியுள்ளனர். மேலும் இருவர்....

பணம் இன்று வரும். நாளை வந்தவழி சென்றுவிடும். ஆனால் பாசம் என்றும் நிலையானது. பணத்திற்காகப் பாசத்தை விற்று விடாதீர்கள், பாசம் கிடைப்பது கடினம். வெளிநாட்டு வாழ்வும் ஒரு மெழுகுதிரி போன்றதுதான். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும். அருகில் சென்று பாருங்கள், அவர்கள் உருகிக் கண்ணீர் வடிப்பது தெரியும்.       

தங்களின் குடும்பங்களின் வறுமையை அகற்றுவதற்காகப் பணம் சம்பாதிக்க வெளிநாடு வந்து அந்த வாழ்வில் எதிர்கொள்ளும் சிலரின் மனவேதனைகளைக் கேட்டோம். பணத்தினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தாலும் பணத்தின்மீது நாம் கொள்ளும் பேராசை மட்டும் நம்மைவிட்டு விலகுவதற்குக் கஷ்டப்படுகிறது. சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவார்கள். ஆனால், அவர்கள் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை என்கிறார் ஓர் அறிஞர். தீய முறையில் சேர்க்கும் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும் என்று விவிலியம் எச்சரிக்கிறது. வாழ்வில் சிலவற்றை நாம் தெளிவாக ஒப்புக்கொள்ள வேண்டும். Arthur Schopenhauer அவர்கள் கூறியது போல, பணத்திற்குக் கடல் நீரின் குணம் உள்ளது. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகுவது போலவேதான் பணப்பற்றும். இந்தப் பற்று, முற்றும் துறந்த முனிவர்களைக்கூட விட்டுவைப்பதில்லை. பணம் இருந்தால் நமக்கே நம்மைத் தெரியாது.

அன்புள்ளங்களே, இன்று பணத்தை நாம் பெரிதாக மதிக்கத் தொடங்கிவிட்டோம். செல்வம் தேடுவதை ஒரு பெரிய தர்மமாகக்கூட நினைக்கத் தொடங்கிவிட்டோம். பணப் பேராசை நம் அடிமனத்துள் சாத்தான் போல் புகுந்து கொண்டு நம்மைப் பல விதங்களில் ஆட்டி வைக்கிறது. பணப் பேராசை சமுதாயத்தின் 'பண்பு' என்று சொல்லுமளவிற்குக்கூட பரவி விட்டது. நம் வாழ்வில் பணம் நமக்கு நிச்சயமாகத் தேவை. அது இல்லாமல் குடும்பத்தையோ, வேறு எந்த நிறுவனத்தையோ நடத்த முடியாது. போரினாலும், இயற்கைப் பேரிடர்களாலும் பாதிக்கப்படும் மற்றும் புலம்பெயரும் மக்களுக்கு உதவுவதற்கும் ஐ.நா. போன்ற நிறுவனங்கள் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கின்றன. ஆயினும் பணம் குறித்த புரிதல் அவசியம். பணத்தின் மீது பேராசை தேவையில்லை. அது அழிவுக்கே வழிவகுக்கும். மனிதர் தனது சவப்பெட்டியில் சுமந்து செல்வது தனது இறந்த உடலை மட்டுமே.

நிறையப் பணம் இருந்தால், வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்ட முடியும் என்பது தப்புக்கணக்கு. எடுத்துக் காட்டாக, பணத்தால் இந்த உலகில் இருக்கும் நல்ல நூல்கள் அனைத்தையும் வாங்கி தன் வீட்டில் அடுக்கி வைக்கும் ஒருவர், எண்ணற்ற புத்தகங்களின் சொந்தக்காரர் என்ற பெயரைப் பெறலாம், ஆனால் இதனால் அவரது அறிவு அதிகரிக்காது. பணத்தைக் கொண்டு இந்த உலகத்தில் இருக்கும் அழகு சாதனங்கள், விலையுயர்ந்த உடைகள் போன்றவைகளை வாங்கிப் பயன்படுத்துவதால் மட்டும் ஒருவர் சமுதாயத்தில் மதிப்புப் பெற்றுவிட முடியாது. ஆனால் ஒருவருடைய நன்னெறி வாழ்வு, தன்னலம் கலக்காத சேவை மனப்பான்மை போன்ற நற்குணங்களே அவரைச் சமுதாயத்தில் உயர்த்திக் காட்டும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியில், சரியான ஓய்வின்றி, குறித்த நேரத்தில் நல்ல உணவை உட்கொள்ளாமல் அங்கும் இங்கும் சுற்றி கடினமாக உழைத்து வருகிறவர்கள், உழைத்துப் பெற்ற செல்வத்தைப் பின்னாளில் அனுபவிக்க முடியாமல் தீராத கடும் நோய்களால் துன்புறுகிறார்கள். இப்படி, பணத்தைக் கொண்டு அடைய முடியாதவை இந்த உலகில் நிறையவே இருக்கின்றன. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஒழுக்கத்தை விற்றுவிடக் கூடாது(Thomas Paine).

பணத்தை அள்ளி அள்ளி வழங்கும் வள்ளலாக இருப்பதால் மட்டும் மற்றவரின்  மதிப்பையும், விசுவாசத்தையும் பெற முடியாது. எண்ணங்களில் ஆடம்பரத்தை வைத்துக்கொண்டு தோற்றத்தில் எளிமையைப் பூணுவதால் பயன் என்ன? ஜூன் தொடங்கவிருக்கிறது. சாதாரண மக்கள் பணத்திற்காக எத்தனை பேரிடம் கையேந்துகிறார்கள், எத்தனை மனக் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பதை நன்றாகவே உணர முடிகின்றது. எனவே இருப்பவர்கள் இல்லாதவரோடு பகிர முன்வருவார்கள் என நம்புவோம். இறைக்க இறைக்கத்தான் கிணறு ஊறும். பணம் இன்று இருக்கும், நாளை மறையும். எனவே பணம் பற்றிய சரியான புரிதலில் வாழ்வோம். பணமும் மகிழ்ச்சியும் பரமப் பகைவர்கள். ஒன்று இருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை(ஆஸ்திரேலியப் பழமொழி)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.