2015-05-18 15:19:00

பல்சுவை – புதிய இரு பால்ஸ்தீனப் புனிதர்கள்


மே,17,2015. மே 17, இஞ்ஞாயிறு கத்தோலிக்கத் திருஅவை 49வது உலக சமூகத் தொடர்பு நாளைச் சிறப்பித்தது. நம் வாழ்வுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் அத்தனை நற்புண்புகளையும் நாம் கற்றுக்கொள்ளும் முதல் கல்விக்கூடம் குடும்பம். அதனால்தான் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்லப்படுகிறது. 49வது உலக சமூகத் தொடர்பு நாளும், அன்பெனும் கொடையுடன் நாம் சந்திப்பதற்குச் சிறந்த இடம் குடும்பம் என்ற தலைப்புடனே சிறப்பிக்கப்பட்டது. இந்நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய செய்தியிலும், “நாம் ஒருவர் ஒருவருடன் எப்படிப் பேச வேண்டுமென்பதைக் மீண்டும் கற்றுக்கொள்ளும்  பெரும் சவாலை இக்காலத்தில் நாம் எதிர்நோக்குகிறோம், இது வெறுமனே தகவல்களை உருவாக்கி சேகரிப்பது அல்ல” என்று கூறியுள்ளார். இக்காலத்தில் ஒருவர் ஒருவருக்குள்ள உறவு பல நேரங்களில் கைபேசி, ஸ்கைப் என்ற அளவிலே இருந்து வருகிறது. நேருக்கு நேர் அமர்ந்து பேசுவதற்கும், குடும்பமாக அமர்ந்து உறவுகளைப் பரிமாறுவதற்கும் நேரம் கிடைப்பதில்லை. எல்லாம் கணனி மயமாகிவிட்ட இக்காலத்தில் நல்ல உறவுகளுடன் வாழவும், நம் வாழ்வில் இறைவனை மையமாகக் கொண்டிருக்கவும் கற்றுத் தருகின்றார்கள் சிறப்பாக வாழ்ந்த மனிதர்கள் பலர். இந்த வரிசையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூயவர்கள் என இஞ்ஞாயிறன்று அறிவித்த Giovanna Emilia De Villeneuve, Maria Alfonsina Danil Ghattas, Mary of Jesus Crucified,  Maria Cristina dell’Immacolata Concezione ஆகிய நால்வரும் நமக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகத் திகழ்கின்றனர்.

ப்ரெஞ்ச் நாட்டவரான புனிதர் Jeanne Emilie de Villeneuve அவர்கள்,  1811ம் ஆண்டில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். தேவையில் இருக்கும் அடுத்திருப்பவர்க்கு உதவி செய்ய வேண்டுமென்ற உணர்வில் ஏழைச் சிறாரின் கல்விக்காக அமலமரி சகோதரிகள் சபையைத் தோற்றுவித்தார். 1854ம் ஆண்டில் இவர் இறந்தார். 1856ம் ஆண்டில் நேப்பிள்ஸ் நகரில் பிறந்த புனிதர் Maria Cristina அவர்கள், திருநற்கருணை பேருண்மையில் மிகுந்த பக்தி கொண்டவர். திருநற்கருணையில் இயேசுவின் சகோதரிகள் சபையை இவர் ஆரம்பித்தார். கல்வியை ஊக்குவித்த இவர், 1906ம் ஆண்டில் மரணமடைந்தார்.  

புனிதர்கள் Maria Alfonsina Danil Ghattas, Mary of Jesus Crucified ஆகிய இருவரும் புனித பூமியில் பிறந்து வளர்ந்து இறைவனடி எய்தியவர்கள். புனித பூமியில் அமைதி நிலவ இவ்விரு புனிதர்களின் பரிந்துரைகள் அதிகம் உதவும் என்றும், இருண்ட இடத்தில் ஒளியைப் பரப்புவர்களாக இவ்விருவரும் உள்ளனர் என்றும் புனித பூமி கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற இந்தப் புனிதர் பட்டமளிப்பு விழாவில், பாலஸ்தீனத் தலைவர் மகமது அப்பாஸ் அவர்களும் கலந்துகொண்டார். புனித Maria Alfonsina Danil Ghattas அவர்கள் 1843ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி எருசலேமில் பிறந்தார். Soultaneh Maria என்ற பெயருடன் திருநீராட்டப்பட்ட இவர், 1860ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி புனித யோசேப் சகோதரிகள் சபையில் முதல் வார்த்தைப்பாடுகளை எடுத்து, Maria Alfonsina என்ற பெயரையும் ஏற்றார். எருசலேமில் புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் மறைக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1865ல் பெத்லகேமில் கல்விப் பணியைத் தொடர்ந்தார். 1874ம் ஆண்டு சனவரி 6ம் நாள் முதல் முறையாக பெத்லகேமில் அன்னைமரியாவைக் காட்சியில் கண்டார். பின்னர் ஓராண்டு சென்று மீண்டும் அன்னைமரியா காட்சியளித்து புதிய துறவு சபையைத் தொடங்குமாறு கூறினார். அதனால், தான் இணைந்திருந்த சபையிலிருந்து முறையாக விலக்குப் பெற்று, எருசலேம் முதுபெரும் தந்தை வின்சென்சோ பிராக்கோ அவர்களின் அனுமதியுடன், செபமாலை அன்னையின் தொமினிக்கன் சகோதரிகள் சபையைத் தொடங்கினார் Maria Alfonsina. இதுவே, பாலஸ்தீனாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் துறவு சபையாகும். பெண்களுக்கென கிராமங்களில் பள்ளிகளை முதலில் ஆரம்பித்தவர் புனித Maria Alfonsina. இவர் Ein Karem ல் 1927ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி இறந்தார். இவரது விழா மார்ச் 25. செபமாலை அன்னை சகோதரிகள் என அறியப்படும் இச்சபை, இன்றும் பாலஸ்தீனிய பெண்கள் துறவு சபையாக, புனித பூமியிலும் மத்திய கிழக்கிலும் பணியாற்றி வருகிறது.

மற்றுமொரு பாலஸ்தீனப் புனிதராகிய Mary of Jesus Crucified, 1846ம் ஆண்டு சனவரி 5ம் தேதி கலிலேயாவின் Abellinல் பிறந்தார். 3 வயதில் பெற்றோரை இழந்த இவர், தனது தம்பி பவுலுடன் சித்தப்பா வீட்டில் வளர்ந்தார். Mariam Baouardy என்ற திருமுழுக்குப் பெயரைக் கொண்ட இவருக்கு 8 வயது நடந்தபோது எகிப்துக்கு தனது உறவினருடன் சென்றார். அதன் பின்னர் இவர் தனது தம்பியைப் பார்க்கவே இல்லை. மிரியத்துக்கு அவரது 13வது வயதில் ஒருநாள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மரபுப்படி மணமகன் எல்லா நகைகளுடன் மணமகள் வீட்டில் காத்திருக்க, Mariam தனது நீண்ட தலைமுடியை வெட்டி ஒரு தட்டில் வைத்துக் கொண்டு எல்லார் முன்னிலையில் வந்து நின்றார். இதனால் கோபமடைந்த அவரது சித்தப்பா, அடிமைகளுடன் சமையல் அறையில் அடைத்து வைத்தார். மூன்று மாதங்கள் கழித்து பாலஸ்தீனாவிலுள்ள தனது தம்பி பற்றிய நினைவு வந்து அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார். அவரது தம்பியும் இரகசியமாகக் கடிதம் அனுப்பினார். தனது தம்பியைச் சந்திப்பதற்காகப் புறப்பட்ட மிரியம், ஓர் அராபிய முஸ்லிம் குடும்பத்தை அணுகினார். முதலில் நன்கு வரவேற்ற அக்குடும்பம், பின்னர் மிரியத்தை முஸ்லிமாக மாறுமாறு கட்டாயப்படுத்தியது. சமய வெறுப்பு அதிகமாக இருந்த காலம் அது. இதனால் அக்குடும்பம், மிரியத்தைக் கொடூரமாய் அடித்து உதைத்து படுகாயப்படுத்தியது. மிரியம் இறந்து விட்டார் என்று நினைத்து ஒரு ஷீட்டில் அவரைக் கட்டி, இருண்ட பள்ளத்தாக்கில் கொண்டுபோய்ப் போட்டது. இந்த நாள் செப்டம்பர் 8. அன்னை மரியா பிறந்த விழாவான அந்த நாளை மிரியம் எப்போதும் சிறப்பாகக் கொண்டாடுவார்.

ஒருநாள் மிரியம் விழித்துப் பார்க்கையில் அவர் ஒரு குகையில் வைக்கப்பட்டு நீல வண்ண முக்காடு அணிந்த ஓர் இளம் அருள்சகோதரி அவருக்கு உதவியதைக் கண்டார். விண்ணகத்தையும், அவரது பெற்றோரையும் கனவிலும் கண்டார் மிரியம். நான்கு வாரங்கள் கழித்து பிரான்சிஸ்கன் சபையினரின் ஆலயத்தில் மிரியத்தை விட்டுச் சென்றார் அந்த இளம் அருள்சகோதரி. 16 ஆண்டுகள் சென்று மார்செய்ல்ஸ் நகரில் மிரியத்தைச் சந்தித்த மருத்துவர் ஒருவர், மிரியத்தின் உடம்பில் இருந்த காயத் தழும்புகளைப் பார்த்து, இவ்வளவு காயங்களுக்குப் பின்னர் ஒருவர் உயிர் வாழ்வது புதுமையே என்று கூறினார். 13வது வயதில் அலெக்சாந்திரியா, பெய்ரூட் எருசலேம் ஆகிய நகரங்களில் பணக்காரக் குடும்பங்களில் வீட்டு வேலை செய்தார். அச்சமயத்தில் எருசலேமின் புனிதக் கல்லறையில் தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். 1863ம் ஆண்டில் மிரியம் தனது 17வது வயதில், நஜ்சார் என்ற சிரியா நாட்டுக் குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல்ஸ் சென்றார். இங்கு, மிரியம் இறைவன் அழைப்பை ஆழமாக உணர்ந்தார். 1865ம் ஆண்டில் புனித யோசேப் சகோதரிகள் சபையில் சேர்ந்தார். படிப்பறிவில்லாத மிரியத்துக்கு சமையல் வேலை, துவைத்தல் போன்ற சாதாரண வேலைகளையே சபையினர் கொடுத்தனர். ஆனால் இந்த வாழ்வின்போது இறைக் காட்சிகளைக் கண்டார் மிரியம். கைகள், கால்களில் இயேசுவின் ஐந்து காய வரம் பெற்றார். 1867ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி முதல் முறையாக இவற்றைப் பெற்றார். இவை தொழுநோய் என்று உணர்ந்து வெட்கப்பட்டு அவற்றை மறைத்தார் மிரியம். ஆயினும் சபை அதிபர் இந்தக் காயங்கள் சாதாரணமானவை அல்ல என அறிந்தார். சில மாதங்கள் கழித்து, இவர் ஆதீன, தியான யோக வாழ்வுக்கு ஏற்றவர் என்று கூறி, சபை அதிபர் ஊரில் இல்லாத சமயத்தில் மிரியத்தை கன்னியர் இல்லத்தைவிட்டு வெளியேற்றினர்.

பின்னர் 1867ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, Pau கார்மல் அடைபட்ட துறவு மடத்தில் சேர்ந்தார். Mariam Baouardy என்ற இவர், சிலுவையில் அறையுண்ட இயேசுவின் மேரி என்ற பெயரையும் ஏற்றார். கிறிஸ்துவின் பாடுகளின் நாளில் மிரியத்தின் காயங்களிலிருந்து இரத்தம் வடிந்தது. திடீரென பரவச நிலைக்குச் செல்வார். 21வது வயதில் சிறு குழந்தைபோல் மாசற்றவராய் காட்சி தருவார். 1870ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பிற கார்மல் சகோதரிகளுடன் இந்தியாவின் மங்களூருக்கு அனுப்பப்பட்டார். அங்கு புதிய கார்மல் சபையை ஆரம்பித்தார் மிரியம். இவரது காயங்களைப் பார்த்து எல்லாரும் கேலி செய்தாலும் இவர் அனைத்தையும் சகித்துக் கொண்டார். ஆண்டவர் பெத்லகேமில் கார்மல் சபையைத் தொடங்கச் சொல்கிறார் என்று சொல்லி, திருத்தந்தையின் அனுமதியுடன் பெத்லகேமிலும் முதல் கார்மல் அடைபட்ட இல்லத்தைத் தொடங்கினார். சிறிய அரபு என அழைக்கப்படும் அருள்சகோதரி மிரியம், 1878ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி மரணமடைந்தார். 

ஒருமுறை புனித மிரியம் இயேசுவிடம், ஆண்டவரே, நான் உமக்கு எப்படி இன்னும் அதிகமாகத் தர முடியும் எனக் கேட்டார். அதற்கு இயேசு, நீ உனது சகோதர சகோதரிகளை அன்பு கூர்ந்தால், நான் உன்னை அன்புசெய்வேன், நீ பிறருக்கு நல்தொண்டு ஆற்றினால் நானும் உன்னிடம் நன்றாக இருப்பேன் என்று பதில் சொன்னார்.

புனித Maria Alfonsina சொல்வார் – புனிதம் என்பது ஒருவர் தனது சிலுவையை மகிழ்வோடு தாங்குவது மற்றும் இன்னல்களையும் தவிர்த்து அன்பு கூர்வது. இயேசுவோடு நடங்கள், அப்போது கீழே தடுமாறி விழமாட்டீர்கள் என்று.

இந்த இரு பாலஸ்தீனப் புனிதர்களால் புதுமைகளும் நடைபெற்றுள்ளன. அமைதி அதிகம் தேவைப்படும் மத்திய கிழக்குப் பகுதிக்காக இப்புனிதர்களிடம் மன்றாடுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.