2015-05-18 16:09:00

திருத்தந்தை : ஒன்றித்திருந்து அதன் வழி சாட்சி பகருங்கள்


மே,18,2015. கடவுளை மறந்தவர்களாகவும், குறிக்கோளற்ற நிலையிலும் வாழும் மனித குலத்திற்கு இயேசுவின் உயிர்ப்பின் சாட்சிகளாக புதிய புனிதர்கள் உள்ளனர் என இஞ்ஞாயிறு புனிதர் பட்டமளிப்புவிழா திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு பிரான்ஸ் நாட்டவர், ஓர் இத்தாலியர், இரு பாலஸ்தீனியர் என  நான்கு பெண் துறவியரை புனிதராக அறிவித்தத் திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திராட்சைக் கொடியில் கிளைகள் இணைந்திருப்பதுபோல், நாமும் உயிர்த்த கிறிஸ்துவிலும் அவரது அன்பிலும் குடிகொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

முத்திப்பேறுபெற்ற Giovanna Emilia de Villeneuve, Maria Cristina, Marie- Alfonsine Danil Ghattas, Maria of Crucified Jesus   ஆகிய நால்வரின் புனிதர் பட்டமளிப்பு விழாவில், 50,000க்கும் மேறபட்ட விசுவாசிகளுடன், பாலஸ்தீன அரசுத் தலைவர் Mahmoud Abbas அவர்களும் கலந்துகொண்டார்.

பல்வேறு துன்பங்கள் மற்றும் தடைகள் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் உறுதியுடன் வாழ்வதற்கும், நற்செய்திக்கு விசுவாசமாக இருப்பதற்கும், உயிர்த்த இயேசுவின்மீது அவர்கள் கொண்டுள்ள விசுவாசமே காரணம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு என்பது, நம்மிடையே இருக்கும் ஒன்றிப்பின் அடையாளமாக உள்ளது, ஏனெனில், உயிர்த்த கிறிஸ்துவை அறிவிப்பது தனியாக அல்ல, அது ஒரே குடும்பமாக வாழ்ந்து அதன்வழி அறிவிப்பதாகும் என்றார் திருத்தந்தை.

' நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக' என தன் சீடர்களுக்காக இயேசு செபித்தது பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றி எடுத்துரைத்து, கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவில் ஒன்றித்திருப்பது, பிறரன்பின் சாட்சிகளாக இருப்பது, நற்செய்தியை எடுத்துரைப்பது ஆகியவற்றில் இந்த 4 புதிய புனிதர்களும், அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.