2015-05-16 16:33:00

பாலின சமத்துவம்,சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கு ஐ.நா. அழைப்பு


மே,16,2015. பெண்கள் மீது ஆண்கள் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் பழக்கங்களுக்கு ஆதரவு வழங்கும் சமூக விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் மற்றும் நலிந்த குடும்பங்களுக்கு எதிரான பாகுபாடுகள் அகற்றப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மே,15, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக குடும்பங்கள் தினத்திற்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறிய பான் கி மூன் அவர்கள், நலிந்த குடும்பங்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடை செய்வதற்கு இந்த உலக நாளில் உறுதி எடுப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.

உலகின் சமத்துவ சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி, பெண்கள் மற்றும் சிறாரின் உரிமைகளுக்கு ஆதரவு வழங்கும் நியாயமான சட்ட முறையான அமைப்புகளைப் பொறுத்தது என்றும் கூறினார் பான் கி மூன்.

எல்லாருக்கும் சம உரிமை வழங்கப்படாத, பெண்கள் மற்றும் சிறாரின் உரிமைகளை நசுக்கும் பாகுபாடான சட்டங்களுக்கும், நடைமுறைகளுக்கும் இக்காலத்திய குடும்பங்களிலும், சமூகங்களிலும், நாடுகளிலும் இடமே இருக்கக் கூடாது என்று மேலும் கூறினார் பான் கி மூன்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.