2015-05-16 15:52:00

பாலஸ்தீன-இஸ்ரேல் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்


மே,16,2015. அமைதியை ஊக்குவிப்பதில் அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவுடன் இஸ்ரேலும் பாலஸ்தீனாவும் உறுதியான தீர்மானங்கள் எடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாலஸ்தீனத் தலைவர் Mahmūd Abbās அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் இருபது நிமிடங்கள் சந்தித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  வத்திக்கானில் இஞ்ஞாயிறன்று நடைபெறும் புனிதர் பட்டமளிப்பு விழாவில், Abbās அவர்கள் கலந்துகொள்வதற்கு நன்றியும் தெரிவித்தார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் பொதுச் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகியோரையும் சந்தித்தார் பாலஸ்தீனத் தலைவர் Mahmūd Abbās.

பாலஸ்தீனாவுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே கையெழுத்திடப்படவிருக்கும் அரசியல் உறவு ஒப்பந்தம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்ற இச்சந்திப்புகளில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே நேரிடை பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம், நீதியும் நிரந்தரமுமான தீர்வு இடம்பெறும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டது.  

மத்திய கிழக்கில் இடம்பெறும் சண்டைகள் குறித்து பேசப்பட்டபோது, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பல்சமய உரையாடல் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டதாக, திருப்பீடம் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.