2015-05-16 16:28:00

Ismaili பிரிவு மக்கள் தாக்கப்பட்டதற்கு கத்தோலிக்கர் கண்டனம்


மே,16,2015. பாகிஸ்தானில் தங்களின் மத நம்பிக்கைக்காக அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று சொல்லி, அவ்வன்முறைக்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டுள்ளது NCJP என்ற பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக் குழு.

கடந்த புதனன்று கராச்சியில் Ismaili Shias முஸ்லிம் பிரிவினர் பயணம் செய்த பேரூந்து பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானதில் 47 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள NCJP குழு, இத்தாக்குதல் குறித்து புலன் விசாரணைகள் நடத்தப்படவும், குற்றவாளிகள் நீதியின்முன் நிறுத்தப்படவும் வேண்டுமென்று அரசை வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் முஸ்லிம் குழு ஒன்று இத்தாக்குதலை நடத்தியதாகச் சொல்லப்படும்வேளை, இத்தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், சிந்து மாநிலத்திலுள்ள கத்தோலிக்க நிறுவனங்கள் மூன்று நாள் துக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.

இத்தாக்குதல் குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய, கராச்சி அருள்பணியாளர்  Nasir John அவர்கள், இத்தாக்குதல் பாகிஸ்தானின் கூறுபடாநிலை மீதான தாக்குதல் என்றும், பாகிஸ்தானில் ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும், யாரும் யாரையும் கொலை செய்யலாம் என்ற நிலை உள்ளது என்றும் தெரிவித்தார்.  

தற்போது பாகிஸ்தானில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் Ismaili Shias முஸ்லிம் பிரிவினர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் துறைமுக நகரமான கராச்சியில் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.