2015-05-15 16:27:00

மின்னணு குப்பைத் தொட்டியாக மாறிவரும் இந்தியா, ஐ.நா. அறிக்கை


மே,15,2015. மின்னணு சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கருவிகள், பழுதாகிப் போனாலும், பழையதாகிப் போனாலும், அவற்றைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக, இந்தியா மாறிவருகின்றது என்று ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

பயனற்றுத் தூக்கி எறியப்படும் பழைய 'ஸ்மார்ட்போன்'கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சமையல் சாதனங்கள் ஆகியவை, பல ஆசிய, ஆப்ரிக்க நாடுகளைச் சென்றடைகின்றன என்று ஐ.நா. சுற்றுச்சூழல் செயல்பாட்டுத் துறையின் (UNEP) அறிக்கை கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான் ஆகிய நாடுகள், இந்த மின்னணு கருவிகளைப் பெருமளவு வீசியெறிகின்றன என்றும், இவ்வாறு எறியப்படும் 'மின்னணு குப்பை' (e-waste), ஆசியாவின் சீனா, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும், ஆப்ரிக்காவின் கானா, நைஜீரியா ஆகிய நாடுகளையும் அடைகின்றன என்றும், இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தூக்கி எறியப்படும் இக்கருவிகளை சரியான முறையில் அழிப்பதற்கு, முதல்தர நாடுகள் செலவழிக்க வேண்டியத் தொகை மிக அதிகமென்பதால், இந்தக் குப்பையை ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு அவை அனுப்பி வைக்கின்றன என்று இவ்வறிக்கை கூறுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் உருவாகும் மின்னணு குப்பையின் மதிப்பு 1900 கோடி டாலர்கள் மதிப்புள்ளவை என்றும், இவற்றில் 90 விழுக்காட்டு குப்பை, ஆசிய, ஆப்ரிக்க நாடுகளை சட்டத்திற்குப் புறம்பாக வந்து சேருகின்றன என்றும் ஐ.நா.வின் அறிக்கை எடுத்துரைக்கிறது.

ஆதாரம் : The Hindu / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.