2015-05-15 15:57:00

பல்சமய உரையாடலையும், நல்லிணக்க வாழ்வையும் ஊக்குவியுங்கள்


மே,15,2015. பல்வேறு மதத்தவர் மற்றும் இனக் குழுக்கள் மத்தியில் பல்சமய உரையாடலையும், அமைதியான நல்லிணக்க வாழ்வையும் ஊக்குவித்து, வெறுப்புணர்வையும் வன்முறையையும் மன்னிப்பாலும் அன்பாலும் மேற்கொள்வதற்கு மக்களுக்கு கற்றுக்கொடுக்குமாறு மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அத் லிமினா சந்திப்பில் இவ்வெள்ளியன்று மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆயர்களை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, ஆயர்களுக்குத் தான் சொல்ல விரும்பிய கருத்துக்களை எழுத்து வடிவில் வழங்கிய பின்னர், அவர்கள் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏறக்குறைய பத்து இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்தனர். 

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இனவாத வன்முறையால் ஏற்பட்ட கடும் பாதிப்புக்கள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல கத்தோலிக்கச் சமூகங்கள் உதவி செய்வதைப் பாராட்டி அவற்றுக்கு நன்றியும் தெரிவித்தார்.

வெறுப்புணர்வும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்படும்போது அவற்றுக்கு மன்னிப்பாலும் அன்பாலும் கிறிஸ்தவர்கள் பதில் சொல்வதற்கு ஆயர்கள் கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணியாளர்கள் உருவாக்கம் பற்றிக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, குருத்துவ மாணவர்களுக்கு மனித மற்றும் ஆன்மீக உருவாக்கப் பயிற்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட கற்பு வாழ்வுக்குப் பிரமாணிக்கமாக இருக்க முடியும் என்றும், குடும்பங்களுக்கு ஆதரவாகச் செயல்படுமாறும் ஆயர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.