2015-05-15 16:02:00

பயப்படும், மகிழ்வற்ற சமூகங்கள் கிறிஸ்தவச் சமூகங்கள் அல்ல


மே,15,2015. பயந்துகொண்டும், மகிழ்ச்சியின்றியும் வாழும் சமூகங்கள் நோயாளிச் சமூகங்கள் மற்றும் அவை கிறிஸ்தவச் சமூகங்கள் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பயம், மகிழ்ச்சி ஆகிய இரு வார்த்தைகளை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

பயம் என்ற மனப்பான்மை, நம்மைப் பலவீனப்படுத்துகின்றது, நமக்குத் தீமை செய்கின்றது, நம்மைக் குன்றிப்போகச் செய்கின்றது மற்றும் நம்மை செயலிழக்கவும் செய்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, பயப்படும் மனிதர் என்ன செய்வதென்று அறியாமல் இருக்கிறார் என்றும் கூறினார்.

பயம் கிறிஸ்தவ மனப்பான்மை அல்ல, இந்த மனப்பான்மை, சுதந்திரமன்றி கூண்டில் அடைக்கப்பட்ட விலங்கு போன்றது, இது ஆபத்தானது, பயப்படும் சமூகங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கமே செல்லும் என்றுரைத்த திருத்தந்தை, இந்தப் பய மனப்பான்மையை, ஆண்டவருக்குப் பயப்படுதல் என்ற மனப்பான்மையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மேலும், கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது வெறுமனே ஆனந்தமாக இருப்பது அல்ல, இந்த மகிழ்ச்சி தூய ஆவியாரின் கொடை, நம் ஆண்டவர் அரசாள்கிறார், வெற்றியடைந்துவிட்டார், அவர் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்திருக்கிறார் என்பதால், நாம் எப்போதும் மகிழ்ச்சியான இதயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

நம்மிடமிருக்கின்ற எல்லாப் பயத்தையும் ஆண்டவர் அகற்றிவிட்டு நாம் மகிழ்ச்சியிலும் அமைதியிலும் வாழச் செபிப்போம் என்று தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.