2015-05-15 16:09:00

காரித்தாஸ் நிறுவனத்தின் எதிர்காலம் ஆசியாவில் உள்ளது


மே,15,2015. உலக மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினரைக் கொண்டிருக்கும் ஆசியாவில் காரித்தாஸ் நிறுவனத்தின் எதிர்காலம் உள்ளது என்று, கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிகெஸ் மாராதியாகா அவர்கள் கூறினார்.

அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவராக எட்டு ஆண்டுகள் பணியாற்றி அத்தலைமைப் பணியை நிறைவு செய்யும் கர்தினால் மாராதியாகா அவர்கள் ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியா மீது கவனம் செலுத்தி வருவதையும் குறிப்பிட்டார்.

உலகம் அனைத்துக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டுமென்று நம் ஆண்டவர் ஆணை விடுத்துள்ளார் என்றும், நமது நற்செய்திப்பணி மதம் மாற்றும் நோக்கத்தைக் கொண்டதல்ல, ஆனால், நம்மிடமிருப்பதைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதாகும் என்றும் கூறினார் கர்தினால் மாராதியாகா.

ஹெய்ட்டி, ஜப்பான், சிலே, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்நிறுவனம் ஆற்றியுள்ள அவசரகாலப் பணிகளை விளக்கிய கர்தினால் மாராதியாகா அவர்கள், மத்திய கிழக்குப் பகுதியில் புலம் பெயர்வோர் பிரச்சனை முடிவற்ற விவகாரமாக உள்ளது என்றும் கவலை தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.