2015-05-15 16:23:00

ஈராக் கிறிஸ்தவர்கள் விசுவாசம் தவிர அனைத்தையும் இழந்துள்ளனர்


மே,15,2015. ஐ.எஸ். இஸ்லாமிய அரசுக்குப் பலியாகியுள்ள ஈராக் கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகள், மரபுகள், மாண்புணர்வு என எல்லாவற்றையும் இழந்து, இவ்வுலக சக்திகளால் கைவிடப்பட்டவர்களாக உள்ளனர், ஆனால், இறைவன்மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் வளர்ந்துள்ளது என்று, ஈராக் அருள்சகோதரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை உறுப்பினர்களிடம் இவ்வாறு உரைத்த, ஈராக் அருள்சகோதரி Diana Momeka அவர்கள், வீடுகளை இழந்துள்ள ஈராக் கிறிஸ்தவர்களின் விசுவாசம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது என்று கூறினார்.

புலம் பெயர்ந்துள்ள மக்களில் பலர், மிகவும் மோசமான நிலைகளில் வாழ்வதாகவும், இந்த இக்கட்டான நிலையிலும் இறைவனின் கரம் தங்களோடு இருப்பதை உணர்வதாகவும் தெரிவித்தார் தொமினிக்கன் சபையின் அருள்சகோதரி Momeka.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் வன்முறை நடவடிக்கையால், ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ஈராக் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.