2015-05-15 16:06:00

அனைத்துலக காரித்தாஸின் புதிய தலைவர் கர்தினால் தாக்லே


மே,15,2015. அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக, மனிலா பேராயர் கர்தினால் லூயிஸ் தாக்லே அவர்கள் இவ்வியாழனன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உரோம் நகரில் நடைபெற்றுவரும் அனைத்துலகக் காரித்தாஸ் நிறுவனத்தின் 20வது மாநாட்டில், அந்நிறுவனத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், இத்தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் ஆசியர் ஆவார்.

உலகின் ஏழைகளின் பெயரால் இப்பொறுப்பை ஏற்பதாக, தொலைபேசி வழியாக நன்றி தெரிவித்த கர்தினால் தாக்லே அவர்கள், ஏழைகளின் திருஅவையை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம் என்றும், இதன்மூலம், புரிதல், நீதி, உண்மையான சுதந்திரம், அமைதி ஆகியவை நிறைந்த உலகை நோக்கிச் செல்வதற்கு நமது சான்று வாழ்வு நம்மை வழிநடத்தும் என்றும் கூறினார்.

மேலும், காரித்தாஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் கர்தினால் தாக்லே அவர்களைப் பாராட்டிய, அந்நிறுவனத்தின் இப்பதவியை நிறைவு செய்யும் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிகெஸ் மாராதியாகா அவர்கள், தனது தொடர்ந்து ஆதரவுக்கும் உறுதி கூறினார்.

ஒரே மனித குடும்பம், படைப்பைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் உரோம் நகரில் நடைபெற்றுவரும் இந்நிறுவனத்தின் 20வது மாநாடு(மே 12-17) வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.