2015-05-14 16:07:00

வத்திக்கான்-பாலஸ்தீன ஒப்பந்தம், ஒரு முன்னோட்டம்


மே,14,2015. வத்திக்கானுக்கும், பாலஸ்தீன நாட்டிற்கும் இடையே உருவாகியுள்ள ஒப்பந்தம், இஸ்லாமியரை பெரும்பான்மையாகக் கொண்ட பல நாடுகளுடன் திருப்பீடம் மேற்கொள்ளக்கூடிய ஒப்பந்தங்களுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாலஸ்தீன நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே தூதரக உறவுகளைத் துவங்க எதுவாக, மே 13, இப்புதன் பிற்பகலில், வத்திக்கானில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த அறிக்கையைக் குறித்து, நாடுகளுடன் உறவுகொள்ளும் திருப்பீடத் துறையின் நேரடிப் பொதுச் செயலர், அருள்பணி அந்துவான் கமில்லெரி அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

1979ம் ஆண்டு, திருத்தந்தை, புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், நியூயார்க் நகரில் அமைந்துள்ள  ஐ.நா.தலைமையகத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்ததிலிருந்து, திருப்பீடத்திற்கும், பாலஸ்தீன நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகளை, அருள்பணி கமில்லெரி அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

PLO எனப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன், 1979ம் ஆண்டு முதல் தன் உறவுகளை மேற்கொண்டு வந்த திருப்பீடம்,  2012ம் ஆண்டு, ஐ.நா.அவை, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக்கொண்ட நேரம் முதல், அதனை, தானும் ஒரு நாடாகக் கருதி வந்தது என்று அருள்பணி கமில்லெரி அவர்கள் குறிப்பிட்டார்.

இப்புதனன்று கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம், வத்திக்கான், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளுக்கிடையே தூதரக உறவுகளை மேற்கொள்ள ஒரு முக்கியமான உந்துதல் என்று அருள்பணி கமில்லெரி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.