2015-05-14 15:43:00

திருத்தந்தை: விளையாட்டுத் திடல் சிறந்ததொரு பள்ளியாக அமையும்


மே,14,2015. ஒவ்வொரு மனிதருக்கும், குறிப்பாக, வளர்இளம் பருவத்தில் இருப்போருக்கு, வழிகாட்டியாக, பயிற்சியாளராக, கல்வி கற்பிப்பவராக இருப்பவர்கள் மிகவும் அவசியமானத் தேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

விளையாட்டுக்களில் பயிற்சி என்ற மையக்கருத்துடன் பொதுநிலையினர் திருப்பீட அவை, மே 14, இவ்வியாழன் முதல், 16, இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

வளர் இளம் பருவத்தில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களைப் புரிந்துகொண்டு, இளையோரை நல்வழிப்படுத்துவோர், அவர்களின் வாழ்வில் ஆழமானத் தாக்கங்களை உருவாக்குவர் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விட்டுக்கொடுத்தல், தியாகம், குழுவாகச் செயல்படுதல் என்ற பல உன்னத பண்புகளைக் கற்றுக்கொள்ள, விளையாட்டுத் திடல் சிறந்ததொரு பள்ளியாக அமையும் என்று திருத்தந்தை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது நிலையினர் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Stanislaw Rylko அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இத்திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள 4வது பன்னாட்டு கருத்தரங்கு வெற்றிபெற தன் ஆசீரை வழங்கியுள்ளார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் தூண்டுதலால், விளையாட்டுக்களை மையப்படுத்திய பன்னாட்டுக் கருத்தரங்குகள், பொதுநிலையினர் திருப்பீட அவையின் ஓர் அங்கமாக, ஏற்பாடு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.