2015-05-14 16:19:00

அனைத்துலகக் காரித்தாஸ் - 20வது மாநாட்டில் கர்தினால் டர்க்சன்


மே,14,2015. 169 நாடுகளில் இயங்கிவரும் காரித்தாஸ் அமைப்புக்கள், உலகின் 200க்கும் அதிகமான நாடுகளில் பணியாற்றி வருவதை, திருப்பீடத்தின் நீதி அமைதி அவை மனதாரப் பாராட்டுகிறது என்று இந்த அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கூறினார்.

மே 12, இச்செவ்வாய் முதல், 17, வருகிற ஞாயிறு முடிய, உரோம் நகரில் நடைபெற்றுவரும் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் 20வது மாநாட்டில், இவ்வியாழனன்று உரைவழங்கிய கர்தினால் டர்க்சன் அவர்கள், மாநாட்டின் வெற்றிக்காக தான் வேண்டுவதாகக் கூறினார்.

காலநிலை மாற்றமும், மனித முன்னேற்றமும் மனித சமுதாயத்திற்கு முன் பல சவால்களை வைக்கின்றன என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், இவ்விரு கூறுகளையும் தகுந்த முறையில் இணைப்பது உலகின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று எடுத்துரைத்தார்.

செல்வந்தர்களுக்கும் வறியோருக்கும் இடையே நிலவும் இடைவெளி ஒவ்வோர் ஆண்டும் கூடிவருவது நமது மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டும் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், தனி மனித மாண்பை நிலைநாட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை உலகின் பொருளாதார அறிஞர்கள் புரிந்துகொள்வதையும் தன் உரையில் குறிப்பிட்டார்.

அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் என்ற துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை உயர்ந்த புலமைப் பெற்றிருக்கவில்லை என்றபோதிலும், மனிதம் என்ற உண்மையில் உன்னத அறிவும், ஆற்றலும் பெற்றுள்ளது என்பதை மறுக்க இயலாது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

மனிதத்தை வளர்க்க திருஅவை மேற்கொள்ளும் முயற்சிகளில், காரித்தாஸ் அமைப்பினரின் பங்கு மிக முக்கியமானது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.