2015-05-13 15:46:00

திருத்தந்தையின் மறைக்கல்வி – குடும்பம் தேடும் 3 வாக்கியங்கள்


மே,13,2015. இத்தாலியில் கோடை காலம் துவங்கிவிட்டதால், உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உரோம் நகரில் இந்நாட்களில் எங்கு நோக்கினும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டமே நிரம்பி வழிகின்றது. இப்புதன் திருத்தந்தையின் மறைக்கல்வி உரையைக் கேட்க, திருப்பயணிகள், சுற்றுலாப்பயணிகள் என உரோம் நகர், தூய பேதுரு வளாகம் நிரம்பி வழிய, குடும்பம் குறித்த தன் போதனைகளைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பம் குறித்த இன்றைய மறைக்கல்விபோதனையில், மூன்று வாக்கியங்கள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். அவையாவன, 'தயவுசெய்து', 'நன்றி' மற்றும் 'மன்னிப்பு'. தயவுசெய்து எனக்கூறி தலையிடுவதும், நன்றியுரைப்பதும், என்னை மன்னியுங்கள் எனக் கேட்பதும் எளிமையான வாக்கியங்களாகத் தெரியலாம், ஆனால் அவற்றை நடைமுறையில் கொணர்வது அவ்வளவு எளிதல்ல.  சாதாரண வாக்கியங்களாகத் தோன்றும் இவை புறக்கணிக்கப்பட்டாலோ, அவை குடும்பங்களில் இல்லாமல் போனாலோ, அது குடும்பங்களின் அடித்தளத்தில் விரிசல்களை ஏற்படுத்தவல்லது. இவ்வாக்கியங்கள் இன்மையால் ஏற்படும் விரிசல், குடும்பங்கள் சிதறிப்போவதற்கு இட்டுச்செல்லக்கூடும். தயவுசெய்து என்று உத்தரவு பெறுவது, நன்றிகூறுவது, மன்னிப்பை வேண்டுவது ஆகியவற்றை உள்ளடக்கிய வாக்கியங்கள், நற்குணங்களின் சாதாரண வெளிப்பாடாக இல்லாமல், நம் தினசரி வாழ்வில் ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் ஆழமான அன்பின் அடையாளமாக இருந்தால், அவை மகிழ்ச்சி நிறைந்த குடும்ப வாழ்வை பலப்படுத்தும். தம்பதியரும் சரி ஏனைய குடும்ப அங்கத்தினர்களும் சரி, நமக்கு உரிமை இருக்கும் இடங்களிலும், தயவுசெய்து எனக்கூறி கருணையுடன் உரையாடும்போது, உண்மையான குடும்ப உணர்வுடன் கூடிய ஒரு சூழலை நாம் உருவாக்குகிறோம். இத்தகைய நடவடிக்கை மூலம், நாம் பிறர்மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதன் வழியாக, நாம் ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் புதுப்பிப்பதோடு, நம் குடும்ப அங்கத்தினர்கள், தங்கள் இதயங்களை நமக்குத் திறக்கவும் அனுமதிக்கிறோம்.   நன்றி என்ற வார்த்தை முக்கியமானது. ஏனெனில், நம் சமூகத்திற்கு நன்றியுணர்வு அதிகம் அதிகமாக தேவைப்படுகின்றது.   நன்றியுணர்வு என்பதே நம்மை, மனித மாண்பு மற்றும் சமூக நீதியின் தேவைகளுக்கு மேலும் உணர்வுடையவர்களாக மாற்றுகின்றது.  நன்றி என்பது கடவுளின் மொழியும்கூட. அனைத்திற்கும் மேலாக அவருக்கே நாம் நன்றிகூற வேண்டும்.   'என்னை மன்னியுங்கள்' என்ற வார்த்தை இல்லையென்றால், காயங்கள் பெரிதாக வளர்ந்து, குடும்பமாயிருக்கும் நம் வாழ்வை பலவீனப்படுத்திவிடும். ஆனால், நாம் மன்னிப்பை வேண்டும்போது, நாம் ஏற்கனவே இழந்துள்ள மதிப்பு, நேர்மை, அன்பு ஆகியவற்றை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஆவலை வெளியிடுகின்றோம். இதன் மூலம், குடும்பங்களிடையே குணப்படுத்தல் என்பது எளிதாகின்றது. ‘தயவுசெய்து என உரைப்பது’, 'நன்றி கூறல்', 'மன்னிப்பை வேண்டுதல்' ஆகியவற்றை நம் இதயங்களிலும், வீடுகளிலும், சமூகங்களிலும் போற்றிப் பாதுகாத்திட உதவுமாறு இறைவனை நோக்கி இறைஞ்சுவோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.