2015-05-13 15:36:00

திருத்தந்தையின் ஆசீரோடு, "வறியோருடன், வறியோருக்கென இசை"


மே,13,2015. நம்மை இறைவனோடும், ஒருவர் ஒருவரோடும் இணைப்பதற்கு இசை பெரிதும் உதவுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வறியோருக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓர் இசை நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் உறுப்பினர்களை, இப்புதன் காலையில் சந்தித்தத் திருத்தந்தை, இசை நமக்குள் உருவாக்கும் உணர்வுகள், நம்மை எப்போதும் மேன்மையடையச் செய்கின்றன என்று கூறினார்.

மகிழ்வான இசையெனினும், சோகமான இசையெனினும் நமது உள்ளங்களில் இருக்கும் இறுக்கங்களைக் குறைத்து, மனதை இலேசாக மாற்றுகின்றது என்றும், அத்தகைய இசையை ஏற்பாடு செய்துள்ளோரை தான் பாராட்டுவதாகவும் திருத்தந்தை கூறினார். 

"வறியோருடன், வறியோருக்கென இசை" என்ற பெயரில், மே 14, இவ்வியாழனன்று, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓர் இசை நிகழ்ச்சியில், வறியோருக்கும், வீடற்றோருக்கும் முதல் இடங்கள் வழங்கப்படும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் பேராயர் Konrad Krajewski அவர்களின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை என்றும், இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர், தாங்களாகவே மனமுவந்து அளிக்கும் நன்கொடைகள், திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பயன்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.