2015-05-13 15:44:00

இயற்கையைக் காக்க செல்வந்தர்களின் முயற்சி என்ன? - திருத்தந்தை


மே,13,2015. அனைவருக்கும் தேவையான அளவு உணவு இவ்வுலகில் இருந்தாலும், அதை, அனைவரோடும்  பகிர்ந்துகொள்ளும் ஆவல் நம்மிடையே இல்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மே 12, இச்செவ்வாய் முதல், 17, ஞாயிறு முடிய உரோம் நகரில் நடைபெறும் அனைத்துலகக் காரித்தாஸ் மாநாட்டின் துவக்க நிகழ்வாக, இச்செவ்வாய் மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெற்றத் திருப்பலியில், திருத்தந்தை இவ்வாறு மறையுரை வழங்கினார்.

'ஒரே மனிதக் குடும்பம், படைப்பைப் பேணிக்காப்பது' என்ற தலைப்பில் துவங்கியுள்ள 20வது அனைத்துலகக் காரித்தாஸ் மாநாட்டின் துவக்கப்பலியை தலைமையேற்று நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் அனைத்து மக்களும் உண்பதற்கு வழி வகைகள் செய்வது நம் அனைவரின் கடமை என்று கூறினார்.

காரித்தாஸ் அமைப்பில் பணியாற்றும் ஒவ்வொருவரும் சமூகப் பணியாற்றுவோர் மட்டுமல்ல, மாறாக, கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்தும் அடையாளங்கள் என்று பாராட்டியத் திருத்தந்தை, கிறிஸ்து என்ற அடித்தளத்தை மறந்து கட்டப்படும் பிறரன்புப் பணி அமைப்புக்கள், உண்மையில் அடித்தளமின்றி கட்டப்படும் கட்டங்களைப் போல் இருக்கும் என்று கூறினார்.

பசித்தோருக்கு உணவளிக்கும்போது அது இறைவனுக்கே உணவளிப்பதாகும் என்பதை செல்வந்தர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, உணவை உருவாக்கும் இயற்கையைக் காப்பாற்ற செல்வந்தர்கள் என்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் என்ற கேள்வியையும் அவர்களிடம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பகிர்வு என்ற அடிப்படையில் பீடத்தைச் சுற்றி கூடியிருக்கும் நாம், பகிர்வு இவ்வுலகில் குறைந்து வருவதால், உடலளவிலும், மனதளவிலும் பசித்திருக்கும் மனிதர்களை நினைத்துப் பார்க்கவேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.