2015-05-12 15:43:00

தம் மக்களையேக் காப்பாற்ற இயலாத அரசுகள் ஆளத் தகுதியற்றவை


மே,12,2015. தம் மக்களையே காப்பாற்ற இயலாத அரசுகள், நாட்டை ஆள்வதற்கான சட்டரீதியான உரிமைகளை இழக்கின்றன என அரசைக் குறை கூறியுள்ளனர், கென்ய ஆயர்கள்.

கென்யாவில் அண்மைக்காலங்களில் தொடர்ந்து படுகொலைகள் இடம்பெற்றுவருவது குறித்து தங்கள் கவலையை வெளியிட்ட ஆயர்கள், சில இடங்களில் கிறிஸ்தவர்கள் திட்டமிட்டுக் கொலைச் செய்யப்படுவது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், எரிசக்தி எண்ணெய் வளமும், கனிமங்களும் கென்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மோதல்களும் கொலைகளும் அதிகரித்துள்ளதாகக் கூறும் ஆயர்கள், இத்தகைய பாதுகாப்பற்ற சூழல்களில், அரசின் கடமையையும் வலியுறுத்தியுள்ளனர். அரசின் அண்மைக் கொள்கைகள் குடுமபங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர் ஆயர்கள்.

அரசு, நேரிய, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், கென்யாவில், அச்சமின்றி, சுதந்திரமாக இடம்பெறும் ஊழல்கள், நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நாடு முழுவதையும் அழித்து வருவதாகவும் கவலையை வெளியிட்டுள்ளனர், கென்ய ஆயர்கள். 

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.