2015-05-11 16:02:00

வலுவற்றோர் அருகில் இருப்பது அன்புக்கு சிறந்த வெளிப்பாடு


மே,11,2015. நாம் ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்வதோ, ஏற்றுக்கொள்வதோ கடினமாக இருந்தாலும், ஒருவர் ஒருவர் மீது அன்பு காட்ட அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மே 10, இஞ்ஞாயிறு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, 'விண்ணக அரசி' என்ற அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியை வழங்கியவேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இந்த ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியில், "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" (யோவான் 15:12) என்று இயேசு கூறிய வார்த்தைகளை மேற்கோளாகக் கூறி, பெரிய, சிறிய விடயங்கள் அனைத்திலும் அன்பு நம்மிடையே வெளிப்படவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இறுதி இரவுணவின் வேளையில் இந்த அன்புக் கட்டளையைக் கொடுத்த இயேசு, அந்த அன்பை, தன் சிலுவை மரணத்தால் நிறைவேற்றி, ஓர் எடுத்துகாட்டாக மாறினார் என்று கூறியத் திருத்தந்தை, இறைவன் மீது நாம் கொள்ளும் அன்பு, அயலவர் மீது நாம் கொள்ளும் அன்பின் வழியே வெளியாகிறது என்று சுட்டிக்காட்டினார்.

குழந்தை, வயதான ஒருவர், நோயுற்ற ஒருவர், வீடற்ற, வேலையை இழந்த மனிதர்கள், புலம்பெயர்ந்தோர் என பல வழிகளிலும் வலுவற்றிருப்போருக்கு அருகில் இருப்பது நம் அன்புக்கு சிறந்ததொரு வெளிப்பாடு என்று திருத்தந்தை தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் வலியுறுத்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.