2015-05-11 16:09:00

திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய அன்னை தின வாழ்த்துக்கள்


மே,11,2015. இஞ்ஞாயிறு நண்பகல், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியை வழங்கியவேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கொண்டாப்பட்ட அன்னை தினத்தையொட்டி, தன் சிறப்பான வாழ்த்துக்களை அன்னையருக்கு வழங்கினார்.

அன்னை தினத்தன்று, நம் குடும்பங்களில் வாழும் அன்னையரை, மற்றும் உடலால் நம்மை விட்டுப் பிரிந்து, ஆன்மீக அளவில் நம்மோடு இணைந்திருக்கும் அன்னையரை, அன்புடனும், நன்றியோடும் எண்ணிப்பார்ப்பது நம் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நம்மிடையே இங்கு இவ்வளாகத்தில் கூடியிருக்கும் அன்னையருக்கு, சிறப்பான வாழ்த்துக்களை, கைத்தட்டலுடன் தெரிவிப்போம் என்று திருத்தந்தை கூறியபோது, வளாகத்தில் கைத்தட்டலும் ஆரவாரமும் நிறைந்தன.

மேலும், வாழ்வை ஆதரிப்போர் என்ற அமைப்பினர், இத்தாலியில் ஐந்தாவது ஆண்டாக மேற்கொண்ட பேரணியில் கலந்துகொண்டோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அல்லேலூயா வாழ்த்தொலி செய்திக்குப் பின்னர் வாழ்த்தினார்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட, 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு, அன்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.