2015-05-11 15:32:00

குழந்தைகள் அன்பில் வளர உதவும் உலகைக் கட்டியெழுப்புவோம்


மே,11,2015. அநீதியும் வன்முறைகளுமின்றி அனைத்துக் குழந்தைகளும் அன்பில் வளர உதவும் உலகைக் கட்டியெழுப்ப அனைவரும் முயல்வோம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

‘அமைதியின் தொழிற்சாலை’ என்ற வட இத்தாலிய அமைப்பு ஒன்றின் அங்கத்தினர்களை இத்திங்கள் காலை முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகைமை, சுயநலம், அனைத்தையும் தன்னகப்படுத்தும் பேராசை ஆகியவற்றால், போர் தொழிற்சாலைகள் வளர்ந்துவரும் இன்றையைச் சூழலில்,  ஒப்புரவையும், அனைவரையும் அணைக்கும் நிலைகளையும் உள்ளடக்கும் கலாச்சாரத்தை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்றார்.

உலகில் அமைதி உருவாக்கப்படவேண்டுமெனில், முதலில் அதற்கான சூழல்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற திருத்தந்தை, பள்ளிகள், விளையாட்டுத் தளங்கள் போன்ற சிறார் கூடிவரும் இடங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றார்.

ஒவ்வொரு குழந்தையும் மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் தேவையை உணர்ந்து அதற்கேற்றாற்போல் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தையும், அங்கு குழுமியிருந்த சிறார் முன் வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்குள்ளேயே ஒப்புரவை வளர்க்க முடியவில்லையெனில் எவ்வாறு நாம் போர்களை நிறுத்தப் போகிறோம் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

இன்றைய உலகில் அமைதியைக் கட்டியெழுப்பத் தேவையானக் கூறுகளாக, உரையாடல், மன்னிப்பு மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த ‘அமைதியின் தொழிற்சாலை’ அமைப்புக்குள் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் வரவேற்கப்படுவது குறித்தும் தன் மகிழ்ச்சியை வெளியிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.