2015-05-11 16:17:00

கியூபத் தலைவர் : 'நான் கத்தோலிக்கத்திற்கு திரும்பக்கூடும்'


மே,11,2015. இஞ்ஞாயிறன்று காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து ஏறத்தாழ ஒருமணி நேரம் உரையாடினார் கியூபா அரசுத்தலைவர் இரவுல் காஸ்த்ரோ. 

50 ஆண்டுகளுக்கு மேலாக முறிந்திருந்த  அமெரிக்க-கியூப உறவை சீராக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய பெரும் பங்கிற்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த பயணத்தை இரவுல் காஸ்த்ரோ  மேற்கொண்டார் என பத்திரிகைகள் எழுதிவரும் வேளையில், இந்த பயணத்தின்போது கியூபா அரசுத்தலைவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கிய பரிசும் அதையே உறுதிச்செய்வதாக இருந்தது.

புலம் பெயர்ந்த மக்களின் சிதையுண்ட படகுகளின் மரத்துண்டுகளைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு சிலுவையின் முன்பு குடியேற்றதார் ஒருவர் செபம் செய்து கொண்டிருப்பது போன்ற கலை வேலைப்பாட்டுடன் கூடிய சிற்பம் ஒன்றை பரிசளித்தார் அரசுத்தலைவர்.

குடியேற்றதார் சார்பாக திருத்தந்தை லாம்பதூசா தீவு வரைச் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசியதையும் இச்சந்திப்பின்போது கியூப அதிகாரிகள் நினைவூட்டி அக்கலைப்படைப்பிற்கு விளக்கமளித்தனர்.

வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்தித்தபின், உரோம் நகரில் இத்தாலிய அரசுத்தலைவர் மத்தேயோ ரென்சியையும் சந்தித்தபின், பத்திரிகையாளர் கூட்டத்தில் உரையாற்றிய கியூபா அரசுத்தலைவர், இரவுல் காஸ்த்ரோ அவர்கள், தான் கத்தோலிக்க மதத்திற்கு திரும்பக்கூடும் என்று தெரிவித்துள்ளார். தான் இளம்வயதில் இயேசுசபையினரால் கற்பிக்கப்பட்டதையும் நினைவுக் கூர்ந்தார் கியூபா அரசுத்தலைவர். 

கத்தோலிக்க மதத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  ஞானமும் பணிவும் தம்மை வெகுவாக கவர்ந்துள்ளதென்றும், திருத்தந்தையின் உரைகள் அனைத்தையும் தான் கவனமுடன் வாசித்துள்ளதாகவும் தெரிவித்தார் அவர்.

செப்டெம்பரில் திருத்தந்தை கியூபா வரும்போது அவர் நிறைவேற்ற உள்ள பொது வழிபாட்டு சடங்குகள் அனைத்திலும் தான் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் கியூப அரசுத்தலைவர் இரவுல் காஸ்த்ரோ.

இரவுல் காஸ்த்ரோவும் அவரது சகோதரர் ஃபிதல் காஸ்த்ரோவும் திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கர்கள் எனினும், கியுபாவில் அவர்களது கம்யூனிசிய புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, கத்தோலிக்க மத வழிபாடுகளில் கலந்துகொள்வதை நிறுத்தியிருந்தனர்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.