2015-05-09 16:07:00

தாயின் இதயம் உலகைக் காப்பாற்றுகிறது, இத்தாலிய ஆயர்


மே,09,2015. நல்லிணக்கத்தின் மார்பகத்தைக் கொண்டுள்ள அன்னையர், தங்களின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாங்கள் சந்திக்கின்ற, தங்களின் பராமரிப்பிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்லிணக்கத்தைப் பொழிவார்களாக என்று, உலக அன்னையர்க்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் இத்தாலிய ஆயர் ஒருவர்.

மே 10, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக அன்னை தினத்திற்கென, “அழகு உலகைக் காப்பாற்றுகிறது” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ள, Campobasso-Bojano பேராயர் Giancarlo Bregantini அவர்கள், இஸ்ரேலில் நடந்த பெரிய பல்சமயக் கூட்டத்தில் யூதமதக் குருக்கள் தங்களின் அன்னையர் பற்றிப் பகிர்ந்து கொண்ட செய்திகளையும் குறிப்பிட்டுள்ளார்.

1943ம் ஆண்டில் நாத்சி வதைப்போர் முகாமில் தான் பிறந்தது பற்றிப் பகிர்ந்துகொண்ட டச்சு நாட்டு ரபி ஒருவர், தனது பெயரை ஒரு நாத்சி அதிகாரி கேட்டபோது, தனது தாய் உடனடியாக ஷாலோம், அமைதி என்று கூறியதையும், தான் ஓர் அழகான யூத ஆண் குழந்தையாகப் பிறந்ததால் தனது உயிர் தப்பிய கதையையும், தனது தாய் இறந்தது மற்றும் தான் வேறு ஒரு தாயினால் காப்பாற்றப்பட்டதையும் விவரித்தார்.

இத்தகைய பகிர்வுகளைக் கேட்கும்போது, ஒவ்வொரு தாயின் அருமை தெரிகின்றது என்றும், அன்னையர் தங்களின் இதயங்களில் அனைத்தையும் புதைத்து வைத்துள்ளனர் என்றும் தனது செய்தியில் கூறியுள்ளார் பேராயர் Bregantini.

உலகில் அன்னையரும், அன்னையர் வடிவிலுள்ள பிற தாய்மாரின் பெருமையை உணர்ந்து நன்றி சொல்லும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிறு உலக அன்னை தினம் சிறப்பிக்கப்படுகின்றது. இந்தியா, இலங்கை உட்பட ஏறக்குறைய எண்பது நாடுகளில் இந்நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.