2015-05-08 15:37:00

திருஅவை ஒன்றிப்புக்காக உள்ளது, கூட்டம் சேர்ப்பதற்கு அல்ல


மே,08,2015. திருஅவைக்குள் இடம்பெறும் விவாதங்கள் ஒன்றிப்புக்கான வழிகளைத் தேடுவதாக இருக்க வேண்டும், அதற்கு மாறாக, மனிதர் எப்போதும் ஒருவர் ஒருவருடன் மோதுவதற்கும், ஒருவர் ஒருவரைக் காட்டிக்கொடுப்பதற்கும், தங்களின் விவாதங்களில் வெற்றியடைவதற்காகக் கூட்டங்களை உருவாக்குவதற்குமாக இருக்கக் கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, திருஅவைக்குள் மாற்றங்கள் இடம்பெறுவதற்கு தூய ஆவியார் உதவுகிறார் மற்றும் காரியங்களை முன்னோக்கி நகரத்திச் செல்கிறார், அதேசமயம், அதன் உறுப்பினர்கள் மத்தியில் ஒன்றிப்பையும் உருவாக்குகிறார்  என்றும் கூறினார்.

திருத்தூதர் பணிகள் நூலில், எருசலேம் முதல் பொதுச் சங்கம் பற்றிப் பேசும் இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை,  திருத்தூதர்கள் காலத்திலிருந்தே எல்லாக் காலங்களிலும், கிறிஸ்தவர்கள் திறந்த மனதுடன் உரையாடலில் ஒருவர் ஒருவரை எதிர்கொண்டு வந்துள்ளனர் என்று கூறினார்.

தூய ஆவியார் திருஅவைக்குள் இயக்கத்தை உருவாக்குகிறார், அது முதலில் குழப்பமாகக் காட்சியளித்தாலும், இந்த இயக்கம் அல்லது மாற்றம், செபத்தோடும், உரையாடல் உணர்வோடும் வரவேற்கப்பட்டால் அது எப்போதும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒன்றிப்பை உருவாக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மறையுரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாசகம் கிறிஸ்தவ நல்லிணக்கத்தின் மையத்தை வெளிப்படுத்துகின்றது, இது நன்மனத்தின் செயலால் மட்டுமல்ல, இது தூய ஆவியாரின் கனியுமாகும் என்று தனது மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.