2015-05-07 16:20:00

விளையாட்டினால் இளையோரில் உருவாகும் உன்னத எண்ணங்கள்


மே,07,2015. "ஒற்றுமையில் சிறிய விடயங்கள் வளர்கின்றன, ஒற்றுமை குலைந்தால் அழிவு உருவாகிறது" என்ற விருதுவாக்குடன் இயங்கிவரும் இலாசியோ (Lazio) விளையாட்டுக் கழகத்தை பாராட்டுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலியின் இலாசியோ என்ற மாவட்டத்தின் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த 7000த்திற்கும் அதிகமான உறுப்பினர்களை, முத்திப்பேறு பெற்ற ஆறாம் பவுல் அரங்கத்தில் இவ்வியாழன் காலை சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளையாட்டின் வழியே இளைய உள்ளங்களில் உருவாக்கக்கூடிய உன்னத எண்ணங்களைப் பற்றிப் பேசினார்.

1900மாம் ஆண்டு இலாசியோ விளையாட்டுக் கழகம், ஓர் இளையோர் குழுவால் துவக்கப்பட்டது என்ற வரலாற்றை நினைவு கூர்ந்தத் திருத்தந்தை, 1900மாம் ஆண்டுகளில், திட்டமிடப்பட்ட விளையாட்டுக்கள் செல்வந்தர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படமுடியும் என்ற கருத்துக்கு, இலாசியோ கழகம் ஒரு மாற்றாக அமைந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 115 ஆண்டுகளாக இயங்கிவரும் இலாசியோ விளையாட்டுக் கழகம், இளையோரிடையே நன்னெறி விழுமியங்களை வளர்த்து வருவதற்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை.

ஒவ்வொரு மனிதரும், உடல், ஆன்மா என்ற இரு கூறுகளைக் கொண்டிருப்பதை நாம் அறிவோம் என்று கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு விளையாட்டும், போட்டி என்ற அடிப்படையில் விளையாடப்பட்டாலும், அங்கும், ஆன்மீக விழுமியங்கள் இருப்பதை இளையோர் உணரவேண்டும் என்று திருத்தந்தை அறிவுறுத்தினார்.

இலாசியோ விளையாட்டுக் கழகத்தின் வழியே, கல்வி, நட்பு, வறியோருக்கு உதவுதல் போன்ற பல்வேறு வழிகளில் ஒவ்வோரு இளைஞனும், இளம் பெண்ணும் உருவாக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை வாழ்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.