2015-05-07 16:26:00

மாலி நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தையின் ‘அத் லிமினா’ உரை


மே,07,2015. மாலி நாட்டு மக்கள், சகிப்பற்றத் தன்மை, ஒருவரை ஒருவர் ஒதுக்கி வாழும் நிலை ஆகியவற்றை விடுத்து வாழவேண்டும் என்ற பாடங்களை, அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, இஸ்லாமியருக்கும் சொல்லித்தரும் கடமை ஆயர்களுக்கு உண்டு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மாலி நாட்டு ஆயர்கள், அத் லிமினா சந்திப்பை மேற்கொண்டு வத்திக்கான் வந்துள்ள வேளையில், அவர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, மாலி நாடு தற்போது சந்தித்துவரும் பிரச்சனைகள் நிறைந்த சூழல் குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாயங்களுக்கிடையே உரசல்கள் எழுந்தாலும், நல்மனம் கொண்ட இரு மதத்தை சேர்ந்தவர்களின் முயற்சியால், டிம்புக்டு (Timbuktu) கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நூலகங்களை, அழிவிலிருந்து காக்க முடிந்தது குறித்து திருத்தந்தை தன் மகிழ்வை வெளியிட்டார்.

விவிலியத்தை மாலி நாட்டு மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளதை பாராட்டியத் திருத்தந்தை, இறைவாக்கு, வெறும் ஏட்டளவு அறிவாக இல்லாமல், வாழ்வை மாற்றக்கூடிய சக்தியாக மாறுவதற்கு, ஆயர்கள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அமைதியை உறுதிசெய்யும் ஒரு கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில், அடுத்தத் தலைமுறைக்கு தகுந்த கல்வியை வழங்குவது மாலி தலத்திருஅவையின் முக்கியக் கடமை என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அத் லிமினா உரையில் எடுத்துரைத்தார்.

1 கோடியே 70 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மாலி நாட்டில், Bambara, Senufo , Fulbe,  Soninke, என்ற பல்வேறு பழங்குடி இனத்தவர் வாழ்கின்றனர். மக்கள் தொகையில், 85 விழுக்காட்டினர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள், 2.5 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், அவர்களில், 1.6 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.