2015-05-07 16:37:00

ஒன்றிப்பு நோக்கி செல்லவேண்டிய தூரம் அதிகம் – திருத்தந்தை


மே,07,2015. ஐரோப்பியக் கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களிடையே நிலவிவரும் பிளவுகள் இன்னும் தீராமல் நீடித்து வருகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் அமைப்பு (CEC) மற்றும், ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் ஒன்றியம் இரண்டும் இணைந்து உருவாக்கியுள்ள ஓர் உயர்மட்டக் குழுவின் பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கி நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகளைப் பற்றிப்  பேசினார்.

பல்வேறு எதிர்ப்புகள் மத்தியிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிப்பு நோக்கி மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளைப் பாராட்டியத் திருத்தந்தை, இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம் என்று சுட்டிக்காட்டினார்.

மனித இயல்பு குறித்தும், நன்னெறி விழுமியங்கள் குறித்தும் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் கொண்டிருக்கும் முரண்பட்டக் கருத்துக்கள் நம்மை தூரப்படுத்துகின்றன என்று திருத்தந்தை தன் வருத்தத்தை வெளியிட்டார்.

ஒன்றிப்பு நோக்கி நாம் மேற்கொள்ளவேண்டிய அனைத்து முயற்சிகளுக்காகவும் ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.