2015-05-06 16:03:00

புனிதர்கள், அருளாளர்கள் வரிசையில், மேலும் 12 பேர்


மே,06,2015. புனிதர்கள் மற்றும் முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கென, அருளாளர்கள், இறையடியார்கள் என, 12 பேர் குறித்த விபரங்கள் இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

புனிதர் நிலை திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பித்த இந்த விபரங்களில், ஏழு இறையடியார்களின் வீரத்துவமான பண்புகளும், இரு மறைசாட்சிகளின் வாழ்க்கை வரலாறும் உள்ளன.

மேலும், இத்தாலியரான அருள்பணி Vincenzo Grossi, இஸ்பானியரான, சிலுவையின் தோழர்கள் சகோதரிகள் சபை தலைமை அன்னை அமலமரியின் மரியா ஆகிய இரு அருளாளர்கள் மற்றும் இறையடியார் இத்தாலிய அருள்பணி Giacomo Abbondo ஆகிய மூவரின் பரிந்துரையால் நடந்த புதுமைகளையும் திருத்தந்தை ஏற்றுள்ளார். 

1960ம் ஆண்டு ஏப்ரலில் லாவோஸ் நாட்டில் விசுவாசத்துக்காக கொல்லப்பட்ட பொதுநிலை விசுவாசி Paolo Thoj Xyooj, மறைசாட்சியான அமலமரி தியாகிகள் சபை அருள்பணி Mario Borzaga ஆகியோரின் வாழ்வு பற்றிய விபரங்களை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை.

உருகுவாய் நாட்டு ஆயர் Giacinto Vera, குரோவேஷிய நாட்டு அருள்பணி Antonio Antié, பெரெஞ்ச் நாட்டவரும், கைம்பெண்ணும், நல்லாயன் சகோதரிகள் சபையைத் தொடங்கியவருமான Giulia Colbert, அமலமரி பிள்ளைகள் சபையைத் தொடங்கிய  Brigida Maria Postorino, இஸ்பெயின் நாட்டவரான புனித கிளாரா கப்புச்சின் சபையின் Raffaela Maria, இத்தாலியர்களான பொதுநிலை விசுவாசிகள் Sergio Bernardini, Domenica Bedonni ஆகிய இறையடியார்களின் வீரத்துவமான பண்புகளையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், முத்திப்பேறு பெற்ற Junipero அவர்களை, புனிதராக உயர்த்த, புனிதர்படி நிலைகள் திருப்பேராயம் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த முடிவையும் திருத்தந்தை இவ்வியாழனன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.