2015-05-06 16:32:00

பிரசவ நேரப் பிரச்சனைகளால் ஒவ்வொரு நாளும் 800 பெண்கள் மரணம்


மே,06,2015. பிரசவ நேரத்தில் உருவாகும் பிரச்சனைகளால், ஒவ்வொரு நாளும், ஏறத்தாழ 800 பெண்கள் உயிரிழக்கின்றனர் என்று கூறும் ஐ.நா. அறிக்கையொன்று, இச்செவ்வாயன்று வெளியானது.

மே 5, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, பேறுகால உதவியாளர் அனைத்துலக நாளையொட்டி (International Day of Midwife), ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில், பேறுகால உதவியாளருக்கு, கூடுதலான பயிற்சிகள் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டில் 5,23,000 என்ற அளவில் உயர்ந்திருந்த இந்த மரணங்கள், அண்மையக் கணக்கெடுப்பின்படி, 2,89,000 ஆகக் குறைந்திருப்பினும், பேறுகால உதவியாளருக்குத் தரப்படும் பயிற்சிகளால், இத்தகைய மரணங்களை மேலும் 87 விழுக்காடு குறைக்கமுடியும் என்று ஐ.நா. உயர் அதிகாரி, மருத்துவர், Babatunde Osotimehin அவர்கள் கூறினார்.

மில்லேன்னிய முன்னேற்ற இலக்குகளை அடையும் நேரம் நெருங்கிவரும் இவ்வேளையில், அன்னையரின் நலம் குறித்த முன்னேற்றங்கள் நோக்கி, தீவிர முயற்சிகள் தேவை என்று மருத்துவர் Osotimehin அவர்கள் எடுத்துரைத்தார்.

பேறுகால உதவியாளரின் பயிற்சிகளைத் தீவிரமாக்க, கடந்த நான்கு ஆண்டுகளில் 35 நாடுகள் முன்வந்துள்ளன என்றும், எத்தியோப்பியா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் விளைவாக, பயிற்சி பெற்ற பேறுகால உதவியாளரின் எண்ணிக்கை, 2050 லிருந்து, 8635 ஆக உயர்ந்துள்ளது என்றும் ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.