2015-05-06 16:52:00

Yazidi மக்கள் மீது வன்முறை தொடர்வது கொடுமையானது - கர்தினால்


மே,06,2015. அமைதியை விரும்பும் Yazidi மக்கள் மீது வெறுப்பு நிறைந்த வன்முறைகளை ISIS அமைப்பினர் தொடர்ந்து நடத்துவது மிகக் கொடுமையானது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் தலைவர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

தங்களைத் தாங்களே ஓர் அரசாக அறிவித்துக்கொண்டு, வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் ISIS தீவிரவாதிகள், கடந்த சில நாட்களாக Yazidi மக்களை ஈவு இரக்கமின்றி கொன்றுவருவதைக் குறித்து கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் Erbil நகருக்குச் சென்றபோது, தான் சந்தித்த Yazidi மக்கள் காட்டிய பொறுமையும், அடக்கமும் தன்னை பெரிதும் கவர்ந்தன என்று கூறிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், இத்தகைய அமைதி விரும்பிகளைக் கொல்பவர்கள் மனிதர்களா என்ற கேள்வி எழுகிறது என்று கூறினார்.

ஈராக்கில் சிறுபான்மையினராக வாழும் Yazidi மக்களில், 5000 பேருக்கும் மேல் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், 7000த்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு, அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.