2015-05-05 15:53:00

உலகில் அன்னையாக இருப்பதற்குச் சிறந்த நாடு நார்வே


மே,05,2015. உலகில் அன்னையாக இருப்பதற்கு மிகச் சிறந்த நாடு நார்வே என்றும், மிக மோசமான நாடு சொமாலியா என்றும் Save The Children குழந்தை நல அமைப்பு கூறியுள்ளது.

தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தாயாக இருப்பதற்கு மோசமான நாடு அமெரிக்க ஐக்கிய நாடு என்றும், மற்ற பணக்கார நாடுகளோடு ஒப்பிடும்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் மகப்பேறு தொடர்புடைய மரணங்கள் மிகவும் அதிகம் என்று Save The Children அமைப்பு கூறியுள்ளது.

“உலக அன்னையரின் நிலை 2015” என்ற தலைப்பில் Save The Children அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில், வளர்ந்த நாடுகளில் மகப்பேறு நலவாழ்வில் அமெரிக்க ஐக்கிய நாடு 61வது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து, ஆஸ்ட்ரியா, பெலாருஸ் போன்ற நாடுகளில் வாழும் பெண்களைவிட, அமெரிக்காவில் வாழும் ஒரு பெண் அவரது கர்ப்பக் காலத்திலோ அல்லது பேறுகாலத்திலோ இறக்கும் வாய்ப்பு பத்துமடங்கு அதிகமாக இருப்பதாக, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய நகரங்களில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான நலவாழ்வு இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதாக அவ்வமைப்பின் அறிக்கை கூறுகிறது.

அதேசமயம், கம்பாலா, அடிஸ்அபபா, மனிலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் நிலவி வந்த அதிகமான மகப்பேறு மரணங்களின் எண்ணிக்கையைக்  குறைப்பதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும் இந்த அமைப்பு பாராட்டியுள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.